உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரோடுகளில் தேங்கும் மழை நீர்; பொதுமக்கள் கடும் பாதிப்பு

ரோடுகளில் தேங்கும் மழை நீர்; பொதுமக்கள் கடும் பாதிப்பு

உடுமலை; உடுமலையில், மழை பெய்தால், ரோடுகளில் மழை நீர் தேங்கி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மழை நீர் வடிகால்கள் இருந்தும், அதிகாரிகள் அலட்சியம் காரணமாக வீணாகியுள்ளது.உடுமலை பகுதிகளில், தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. பெய்யும் மழை நீர் வெளியேற வழியின்றி, ரோடுகளின் மத்தியில் தேங்கி, போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ரோடுகளும் குண்டும், குழியுமாக மாறி, விபத்துக்களை ஏற்படுத்துகிறது.உடுமலை - தாராபுரம் ரோடு, திருப்பூர் ரோடு, பழநி பகுதியில்,நெடுஞ்சாலைத்துறை சார்பில், பெரிய அளவில் மழை நீர் வடிகால்கள் அமைக்கப்பட்டன.ஆனால், பெய்யும் மழை நீர் அனைத்தும், வடிகால்களுக்கு செல்லும் வகையில் வசதி ஏற்படுத்தாமல், ரோட்டை விட உயரமாகவும், உரிய ஓட்டைகள் அமைக்கப்படாமலும், பெயரளவிற்கு அமைக்கப்பட்டதால், ரோட்டிலேயே குளம் போல் வெள்ள நீர் தேங்கியுள்ளது.அதே போல், நகராட்சி சார்பில், தாலுகா அலுவலகம், நீதிமன்றம், அரசு மருத்துவமனை உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் உள்ள ரோட்டில், புதிதாக மழை நீர் வடிகால் அமைக்கப்பட்டது.ஆனால், பெய்யும் நீர், வடிகால் வழியாக வெளியேறும் கட்டமைப்பு அமைக்காமல், திட்ட குளறுபடி காரணமாக, கழிவு நீருடன், மழை நீரும் தேங்கி சுகாதாரக்கேடு ஏற்படுத்தி வருகிறது.மேலும், வணிக வளாகம், கடை உரிமையாளர்கள் மழை நீர் வடிகாலை ஆக்கிரமித்தும், அடைத்தும் வழித்தடம், கடை அமைத்துள்ளதால், பயனில்லாமல் உள்ளது. அதே போல், கல்பனா ரோடு, பசுபதி வீதி, வ.உ.சி., வீதி என நகர பகுதியிலுள்ள ரோடுகளில், மழை வெள்ள நீர் வடிய வழியில்லை.இதனால், மழை வெள்ள நீர் வடிய வழியின்றி, ரோடுகளில் தேங்கி, சேறும், சகதியுமாக மாறியுள்ளது. இதனால், வாகன போக்குவரத்து பாதிப்பதோடு, ரோடுகளும் சேதமடைந்து வருகிறது.பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல், கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே, நகர பகுதியிலுள்ள மழை நீர் வடிகால் ஆக்கிரமிப்புளை அகற்றி, துார்வார வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ