உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குடியிருப்பு வளாகத்தில் மழைநீர்; தீர்வு கிடைக்குமா?

குடியிருப்பு வளாகத்தில் மழைநீர்; தீர்வு கிடைக்குமா?

திருப்பூர்: 'திருப்பூர், பாரதி நகரில் மழைநீர் வெளியேறாமல் தேங்கி நிற்கும் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்' என, குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் மாநகராட்சி, 4வது வார்டு பாரதி நகரில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில், முதல் திட்டத்தில், 288 குடியிருப்புகள் கட்டப்பட்டு, பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இங்குள்ள வீடுகளின் மேல் தளத்தில் இருந்து வெளியேறும் மழைநீரை வெளியேற்ற, நிலத்தடியில் உறிஞ்சுகுழி அமைக்கப்பட்டிருக்கிறது. துவக்க நாட்களில், மழைநீர், உறிஞ்சுக்குழி வாயிலாக நிலத்தடிக்குள் சென்ற நிலையில், சில மாதங்களாக மழைநீர் நிலத்தடியில் புகாமல் தேங்கி நிற்கிறது; சில நாட்களாக, தொடர்ச்சியாக மழை பெய்த நிலையில், மழைநீர் வெளியேறாமல், வடிகாலில் தேங்கி நிற்கிறது; இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, அடுக்குமாடி குடியிருப்புவாசிகள், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் மனு வழங்கினர். மனுவின் மீது, மாநகராட்சி நிர்வாகம் அளித்துள்ள விளக்கத்தில், 'அடுக்குமாடி குடியிருப்பு, மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்படவில்லை. தற்போது, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் வாயிலாக பராமரிக்கப்பட்டு வருவதால், மாநகராட்சி சார்பில் பராமரிக்க வழிவகை இல்லை' என விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், தேங்கும் மழைநீர் அவ்வப்போது, மாநகராட்சி துாய்மைப்பணியாளர்கள் வாயிலாக சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் கேட்ட போது, 'மழைநீரை நிலத்தடியில் செலுத்தும் உறிஞ்சுகுழி நிரம்பி, மழைநீர் வெளியே நிற்கிறது. வெளியேறும் மழைநீரை, சாலையின் எதிர்புறமுள்ள மாநகராட்சியின் மழைநீர் வடிகாலுடன் குழாய் வாயிலாக இணைக்கும் யோசனை முன்வைக்கப்பட்டது. இதற்கு மாநகராட்சி நிர்வாகமும் ஒத்துக்கொண்டது. இப்பணி மேற்கொள்ள டெண்டர் விடப்பட்டுள்ளது; விரைவில் பணி துவங்கும்; பிரச்னைக்கு தீர்வு காணப்படும்,' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ