உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தடுப்பணையை உயர்த்தி கட்டுங்க! விவசாயிகள் எதிர்பார்ப்பு

தடுப்பணையை உயர்த்தி கட்டுங்க! விவசாயிகள் எதிர்பார்ப்பு

உடுமலை; சின்னப்பள்ளம் தடுப்பணையை உயர்த்தி, நீர் வரத்து ஓடைகளை துார்வார அப்பகுதி விவசாயிகள் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளனர். உடுமலை ஒன்றியம், பாப்பனுாத்து, புங்கமுத்துார், தேவனுார்புதுார் உட்பட பல்வேறு கிராமங்களில் உருவாகும் மழை நீர் ஓடைகள், நல்லாற்றுடன் இணைந்து மேற்கு நோக்கி செல்கின்றன. அப்பகுதி நிலத்தடி நீர் மட்டத்துக்கு ஆதாரமான, இந்த மழை நீர் ஓடைகளின் குறுக்கே, பல்வேறு திட்டங்களின் கீழ் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. வடகிழக்கு பருவமழைக்காலத்தில், மழை நீர் ஓடைகளில் அதிக நீர் வரத்து இருக்கும்; மழைக்காலத்தில், பாசன திட்ட உபரி நீரும், ஓடைகளில் செல்கிறது. இவ்வாறு, ஓடைகளில் சென்று, தடுப்பணைகளில், தேங்கும் தண்ணீரே அப்பகுதி நிலத்தடி நீர் மட்டத்துக்கு ஆதாரமாக உள்ளது. பாப்பனுாத்து, புங்கமுத்துார் கிராமங்கள் வழியாக சின்னப்பள்ளம் செல்கிறது. தற்போது, இந்த பள்ளத்தில், அதிக நீர் வரத்து உள்ளது. ஆனால், அதிக உயரமில்லாமல் கட்டப்பட்ட தடுப்பணையில், போதியளவு தண்ணீர் தேங்குவதில்லை. அப்பகுதி விவசாயிகள் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பியுள்ள மனு: பருவமழைக்காலத்தில், ஓடைகளில் செல்லும் தண்ணீரை தேக்க தடுப்பணைகள் கட்டப்பட்டிருந்தாலும், அவை முறையாக பராமரிக்கப்படுவதில்லை. மழைக்காலத்துக்கு முன், நீர் வழித்தடங்களை துார்வாரி, தடுப்பணை சுவர்களை பராமரிக்க வேண்டும். சின்னப்பள்ளம் உட்பட ஓடைகளின் குறுக்கே தடுப்பணைகளை உயர்த்தி கட்டினால், கூடுதலாக தண்ணீர் தேங்கும்; நிலத்தடி நீர் மட்டமும் உயரும். இது குறித்து பொதுப்பணித்துறையினர் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை