வாழ்த்துடன் வரி குறைப்பு வேண்டுகோள்
திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சியில் புதிய கமிஷனராகப் பொறுப்பேற்றுள்ள அமித்தை, மாநகராட்சி எதிர்க்கட்சி குழு தலைவர் அன்பகம் திருப்பதி தலைமையில், அ.தி.மு.க., கவுன்சிலர்கள் நேற்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். கமிஷனரிடம் அளித்த மனு:திருப்பூர் மாநகராட்சியில் சொத்துவரி, வீட்டு வரி, குப்பை வரி உள்ளிட்ட வரியினங்கள் அளவுக்கதிகமாக வசூலிக்கப்படுகிறது. திருப்பூர் தொழில் நகரமாக இருந்தாலும் தற்போதைய சூழ்நிலை தொழில்களுக்கு ஏற்ற வகையில் இல்லை. மாநகராட்சியின் உயர்த்தப்பட்ட வரியினங்கள் குறித்து பல்வேறு அமைப்புகள், கட்சிகள் உள்ளிட்ட பல தரப்பில் ஆலோசனை நடத்தப்பட்டது. கவுன்சிலர்கள் வேண்டுகோளின்படி, வரியினங்களை குறைக்க வலியுறுத்தி, கடந்த மார்ச் மாதம், மாநகராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.ஆனால், இதுவரை அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. எனவே, இப்பிரச்னையில் உரிய கவனம் செலுத்தி, வரியினங்கள் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.