ஆராய்ச்சி, புதுமைக்கான செலவுகள்: நாட்டின் எதிர்காலத்துக்கான முதலீடு
திருப்பூர்: 'ஸ்டார்ட் அப் இந்தியா' வழிகாட்டி ஆலோசகர் ஜெய்பிரகாஷ் கூறியதாவது: 'இந்தியா -2047 ல் 'விக்சித் பாரத்' என்பது, முழுமையான வளர்ந்த தேசமாகும் கனவை நோக்கி நகர்கிறது. ஒரு தேசம் எவ்வளவு தொழில்நுட்பத்தை உருவாக்குகிறது; அதன், கல்வி, தொழில், சமூக அமைப்புகள் எவ்வளவு தீர்வுகளை கண்டுபிடிக்கின்றன என்பதே, உண்மையான முன்னேற்றம். ஆராய்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சிக்கு அல்ல; சுய நிறைவு மற்றும் உலகத்தில் போட்டியிடும் திறனை மேம்படுத்த முக்கியம். ஒவ்வொரு கல்லுாரியும், ஆராய்ச்சி நிலையமாக மாற வேண்டும் என்பதே, 'விக்சித் பாரத்' திட்டத்தின் நோக்கம். அரசு, தொழில், கல்வி ஆகிய மூன்று பிரிவுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான செலவு, மொத்த உள்நாட்டு வளர்ச்சியில், 2 சதவீதமாக இருக்க வேண்டும். பல்கலை, தொழில் கூட்டாண்மை வலுப்படுத்த வேண்டும். பள்ளி நிலையில் இருந்தே ஆராய்ச்சி சிந்தனையை உருவாக்க வேண்டும். 'விக்சித் பாரத்' என்பது ஒரு அரசு திட்டம் அல்ல; அது, ஒரு தலைமுறையின் பொறுப்பு. ஆராய்ச்சி மற்றும் புதுமைக்கான முதலீடு நாட்டின் எதிர்காலத்துக்கான முதலீடு போன்றது. அடுத்த தலைமுறை இளைஞர்கள், கற்க, கண்டுபிடிக்க, உலகை வழிநடத்த தயாராகின்றனர். இதேதான், 'விக்சித் பாரத்' திட்டத்தின் சரியான பொருள்விளக்கம்.