உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பாறைக்குழியில் குப்பை கொட்ட மக்கள் எதிர்ப்பு

பாறைக்குழியில் குப்பை கொட்ட மக்கள் எதிர்ப்பு

அவிநாசி; அவிநாசி அடுத்த பழங்கரை ஊராட்சிக்குட்பட்ட பெரியாயிபாளையம் பகுதியில் பயன்படுத்தாத பாறைக்குழி உள்ளது. மழையால் தண்ணீர் நிரம்பி காணப்படும் இந்தப் பாறைக்குழியில் அவ்வப்போது சிறுவர்கள் மீன்பிடிப்பதற்காகவும் நீச்சல் பழகுவதற்காகவும் செல்லும்போது எதிர்பாராமல் உயிரிழப்புகள் நேரிட்டது. பாறைக்குழியை சுற்றிலும் ஐநுாறுக்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

கடும் துர்நாற்றம்

கடந்த சில ஆண்டுகள் முன், பாறைக்குழியை மூடும் நடவடிக்கையாக திருமுருகன் பூண்டி, பழங்கரை உள்ளிட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகள், கட்டடக் கழிவுகள் ஆகியவற்றை கொண்டு வந்து கொட்டி வந்தனர். மழைக்காலங்களில், குப்பைக்கழிவுகளில் இருந்தும், இறைச்சி கடைக்காரர்கள் கொண்டு வந்து கொட்டும் இறைச்சி கழிவுகளில் இருந்தும் கடும் துர்நாற்றம் வீசுகிறது.காற்று வீசும் போது, குப்பைகள் அருகில் உள்ள குடியிருப்புகளில் விழுந்தது. முதியோர்கள், குழந்தைகள் சுவாச பிரச்னை உள்ள நோயாளிகள் அனைவரும் அவதிப்பட்டனர்.

புகை மண்டலம்

குப்பை கிடங்கிற்கு அடிக்கடி மர்ம நபர்கள் தீ வைத்து விடுவதால் கடும் புகை மண்டலமாகவும் சுவாசிக்க முடியாத நிலையில் துர்நாற்றத்துடன் கூடிய காற்று வீசுவதால் பல்வேறு வித நோய்களுக்கு ஆளாவதாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.இதன் எதிரிலேயே ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் திருவள்ளுவர் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் 50க்கும் மேற்பட்ட ஆதரவற்ற குழந்தைகள், முதியவர்கள் தங்கி உள்ள காப்பகமும் செயல்பட்டு வருகிறது.இந்த பகுதியில் வசிப்பவர்கள் காலை மற்றும் மாலை வேளையில் நடை பயிற்சி செய்வதற்காக பள்ளி காம்பவுண்ட் ஒட்டி உள்ள ரோட்டை பயன்படுத்துகின்றனர்.ஆனால் பாறைக்குழியில் உள்ள குப்பை கிடங்கிற்கு தீ வைப்பதால் எழும் புகையின் காரணமாக நடைப்பயிற்சி மேற்கொள்ள முடியாமல் அவதிக்குள்ளாகின்றனர்.

மாற்று ஏற்பாடு தேவை

பழங்கரை ஊராட்சி நிர்வாகம் உடனடியாக குப்பை கிடங்குக்கு மாற்று ஏற்பாடு செய்து குப்பைகளை பாறை குழியில் கொட்டாமல், பள்ளி மாணவர்களுக்கும், குடியிருப்புகள், காப்பகம் ஆகியவற்றில் வசிக்கும் மக்களுக்கும் துாய்மையான காற்றையும் சுகாதாரமான சுற்றுச்சூழலையும் ஏற்படுத்தி தர கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !