பள்ளிகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்துங்க! கல்வித்துறை கவனிக்குமா?
உடுமலை; பள்ளிகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் வகையில், கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. உடுமலை சுற்றுப்பகுதியில், 200க்கும் அதிகமான அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் உள்ளன. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. குறிப்பாக, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சுற்றுச்சூழல் மன்றங்கள், பசுமைப்படை, நாட்டுநலப்பணி திட்டங்கள் செயல்படுகின்றன. இந்த அமைப்புகளில் உள்ள மாணவர்களுக்கு, இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இயற்கையை பாதுகாப்பதற்கான செயல்பாடுகள் குறித்தும் தொடர்ந்து போட்டிகள், முகாம்கள், பேரணிகள் நடத்தப்படுகின்றன. குறிப்பாக மரக்கன்று நடுவதற்கு பல பள்ளிகளில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஆனால் இருக்கும் இயற்கை சூழலை பாதுகாப்புக்கும், வழிமுறைகளுக்கான முக்கியத்துவம் பள்ளிகளில் குறைவாகவே உள்ளது. பள்ளிகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்துவதற்கு, தீவிரமான நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. மாணவர்கள் வாங்கி உண்ணும் சிற்றுண்டிகள் உட்பட அனைத்திலும், பிளாஸ்டிக் இடம் பெறுகிறது. அதன் கழிவுகள் பள்ளி வளாகத்தில் தான் கொட்டப்படுகின்றன. ஒருசில பள்ளிகளில் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை கட்டுப்படுத்தியும், அதற்கான தொடர் கண்காணிப்பும் நடத்தப்படுகிறது. பெரும்பான்மையான பள்ளிகளில் பேரணிகளில் இருக்கும் விழிப்புணர்வு, பள்ளி வளாகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுபடுத்துவதில் இருப்பதில்லை. பள்ளிகளில் முழுமையான பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்த கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். சுற்றுச்சூழல் சங்கத்தினர் கூறியதாவது: பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு முறைகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. ஆனால், அதற்கான முதல் நடவடிக்கை பள்ளியில் இருந்து துவங்க வேண்டும். பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை குறைப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் பள்ளிகளில் தீவிரமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். அதற்கு கல்வித்துறைதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.