உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வருவாய்த்துறையினர் வேலை நிறுத்தம் அலுவலகங்கள் வெறிச்: பணி முடக்கம்

வருவாய்த்துறையினர் வேலை நிறுத்தம் அலுவலகங்கள் வெறிச்: பணி முடக்கம்

திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்தில், வருவாய்த்துறையினர் 297 பேர், 48 மணி நேர ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். இதனால், வருவாய்த்துறை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர், ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, 48 மணி நேர தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை, தமிழகம் முழுவதும் நேற்று துவக்கினர். இதில், திருப்பூர் மாவட்டத்தில், வருவாய்த்துறையில் பணிபுரியும் அலுவலக உதவியாளர் முதல் தாசில்தார் நிலையிலான 297 பேர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கலெக்டர் அலுவலக வளாகத்தில், கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் மதன்குமார் தலைமைவகித்தார். மாவட்ட தலைவர் தங்கவேல் முன்னிலை வகித்தார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையில் மூன்று ஆண்டுக்கும் மேலாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை உடனே நிரப்பவேண்டும்; மூன்று ஆண்டுக்கு உட்பட்ட 564 அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்பவேண்டும். உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில், குறுகிய கால அவகாசத்தில் அதிக முகாம்கள் நடத்தப்படுகின்றன. வாரம் இரண்டு முகாம் மட்டுமே நடத்த வேண்டும். சான்று வழங்கல் மற்றும் 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு திட்ட பணிகளை மேற்கொள்ள, அனைத்து தாலுகாக்களிலும் புதிதாக துணை தாசில்தார் பணியிடங்களை உருவாக்கவேண்டும். கருணை அடிப்படையில் பணி நியமனத்துக்கான உச்சவரம்பு, 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனை ரத்து செய்து, மீண்டும் 25 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்பது உட்பட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. வருவாய்த்துறையினரின் 48 மணி நேர வேலை நிறுத்த போராட்டம், இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கிறது. இதனால், மாவட்டத்திலுள்ள அனைத்து வருவாய்த்துறை அலுவலகங்களும் வெறிச்சோடின. பல்வேறு பணி நிமித்தமாக தாலுகா அலுவலகம் சென்ற பொதுமக்கள் ஏமாற்றுத்துடன் திரும்பி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ