நெடுஞ்சாலை சந்திப்பில் விபத்து அபாயம்; சிக்னலை சீரமைக்க வலியுறுத்தல்
உடுமலை : முக்கிய சந்திப்பில், தேசிய நெடுஞ்சாலையை சீரமைத்து, காட்சிப்பொருளாக உள்ள சிக்னலை பயன்பாட்டுக்கு கொண்டு வர, வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து உடுமலை நகர எல்லையில், கொழுமம் ரோடு பிரிகிறது. இந்த சந்திப்பு பகுதியில், விபத்துகளை தவிர்க்க, சில ஆண்டுகளுக்கு முன், 'ரவுண்டானா' போன்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. தேசிய நெடுஞ்சாலையில் வரும் வாகனங்கள், சந்திப்பு பகுதிகளில், வேகத்தை குறைத்து செல்ல, அப்பகுதியில், போக்குவரத்து போலீஸ் சார்பில் தானியங்கி சிக்னல் அமைக்கப்பட்டது.இதனால், தேசிய நெடுஞ்சாலை மற்றும் கொழுமம் ரோட்டிலிருந்து வரும் வாகனங்கள் வேகத்தை குறைத்து, சந்திப்பு பகுதியை கடந்து வந்ததால், நெரிசலும், விபத்துகளும் தவிர்க்கப்பட்டு வந்தது.தற்போது, தானியங்கி சிக்னல் பயன்பாடு இல்லாமல், இருப்பதால், கொழுமம் ரோட்டுக்கு செல்லும் வாகனங்கள், தேசிய நெடுஞ்சாலையை கடப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக தானியங்கி சிக்னலை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.அதே போல், சந்திப்பையொட்டி, தேசிய நெடுஞ்சாலையில், அதிகரித்து வரும் குழிகளால், வாகன ஓட்டுநர்கள் தடுமாறுகின்றனர். எனவே, ரோட்டையும் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.