குப்பை கிடங்காக மாற்றப்படும் ஆறு; குடிநீர் ஆதாரம் பாதிக்கும் அபாயம்
உடுமலை; அமராவதி ஆற்றின் கரையில், கழிவுகள் கொட்டப்பட்டு, குப்பை கிடங்காக மாற்றப்படுவதால், கடும் பாதிப்பு ஏற்படுகிறது. உடுமலை, அமராவதி அணையிலிருந்து துவங்கும் அமராவதி ஆறு, உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், அரவக்குறிச்சி, கரூர் வழியாக செல்கிறது. இரு மாவட்ட மக்களின் பாசனம் மற்றும் குடிநீர் ஆதாரமாகவும் அமராவதி ஆறு உள்ளது. வழியோரத்தில், 60க்கும் மேற்பட்ட குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குடிநீர் ஆதாரமாக உள்ள அமராவதி ஆற்றில், வழியோர கிராமங்களிலிருந்து, சாக்கடைக்கழிவு நீர் நேரடியாக ஆறு மற்றும் கால்வாய்களில் கலக்கப்படுகிறது. அதே போல், கொழுமம் அமராவதி ஆற்றின் கரையில், ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளில் சேகரமாகும் கழிவுகள் கொட்டப்பட்டு, குப்பை கொட்டும் மையமாக மாற்றப்பட்டுள்ளது. இதனால், சுகாதாரக்கேடு ஏற்படுவதோடு, பிளாஸ்டிக் உள்ளிட்ட ஆபத்தான கழிவுகள் ஆற்று நீரில் கலந்து, பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குடிநீர் ஆதாரமாக உள்ள அமராவதி ஆற்றில் நேரடியாக கழிவுகள் கலப்பதையும், ஆற்றின் கரைகளில் அமைக்கப்பட்டுள்ள குப்பைக்கிடங்குகளை அகற்றவும், நீர் வளத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகங்கள், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.