நெடுஞ்சாலையில் ரோடு மார்க்கிங் பணி தீவிரம்!
உடுமலை; தாராபுரம் மாநில நெடுஞ்சாலையில், விபத்துகளை தவிர்க்க ரோடு மார்க்கிங் செய்யும் பணி நெடுஞ்சாலைத்துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.தற்போது அதிகரித்து வரும் வாகனங்கள், ரோடுகளில் போதிய வசதி இல்லாதது, விதிமுறை மீறல்கள் போன்ற காரணங்களால், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இதை தடுக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீண்ட காலமாக பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.உடுமலை - தாராபுரம் மாநில நெடுஞ்சாலையானது மடத்துக்குளம் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்தால் பராமரிக்கப்படுகிறது. இந்த நெடுஞ்சாலையில், 3.4 வது கி.மீ., ல் இருந்து, 4.4 கி.மீ., வரை, சி.ஆர்.ஐ.டி.பி., திட்டத்தின் கீழ், ரோடு மேம்படுத்தப்பட்டது.அப்பகுதியில், நெடுஞ்சாலைத்துறை சார்பில், வாகன ஓட்டுநர்களுக்காக குறியீடுகள் அமைக்கும் பணி நடக்கிறது.இரவு நேரங்களில், ரோட்டின் ஓரப்பகுதி தெளிவாக தெரியும் வகையில், தெர்மோ பிளாஸ்டிக்கை பயன்படுத்தி, ரோடு மார்க்கிங் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மாநில நெடுஞ்சாலையில், விடுபட்ட அனைத்து பகுதிகளிலும், ரோடு மார்க்கிங் பணி தொடரும் என, நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவிக்கின்றனர்.துறையினரின் இந்த நடவடிக்கையால், விபத்துகள் குறைய வாய்ப்புள்ளது.