மூன்று மாதமாக நடக்காத சாலை பணி
திருப்பூர்: மாநகராட்சியில் பூமி பூஜை நடத்தி மூன்று மாதமாகியும் ரோடு பணி துவங்காமல் உள்ளது. வாகன ஒட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். திருப்பூர் மாநகராட்சி பகுதியில் பல்வேறு வார்டுகளில் தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தில் ரோடுகள் அமைத்தல் மற்றும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. அவ்வகையில், 53வது வார்டுக்கு உட்பட்ட திருவள்ளுவர் நகரில் 87.50 லட்சம் ரூபாய் மதிப்பில் பணிகள் திட்டமிடப்பட்டது. கடந்த ஆக., மாதம் இதற்கான பூமி பூஜை நடந்தது. இதில் நொச்சிபாளையம் பிரிவு பிரதான ரோடு, விக்னேஷ்வரா நகர் பிரதான மற்றும் குறுக்கு வீதிகளில் தார் ரோடு அமைத்தல் மற்றும் சீரமைத்தல் ஆகிய பணிகள் துவங்கின. பூமி பூஜை நடத்தி மூன்று மாதங்களாகியும் இது வரை இப்பணி துவங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. பிரதான ரோட்டில் ஜல்லிக்கற்கள் கொண்டு வந்து கொட்டப்பட்டது. அது ரோட்டில் பரவி அவதியை ஏற்படுத்துகிறது. குண்டும் குழியுமாக உள்ள ரோட்டில் மழை நாட்களில் மழை நீர் தேங்கி மேலும் சிரமத்தை அதிகரிக்கிறது. இவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.கவுன்சிலர் மணிமேகலை கூறுகையில், ''ரோடு பணிக்கு டெண்டர் எடுத்த ஒப்பந்த நிறுவனம் மேலும் சில இடங்களில் பணி செய்கிறது. இந்த ரோடு பணியைத் துவங்கவிருந்த நிலையில் மழை பெய்யத்துவங்கி விட்டது. மழை காரணமாக ரோடு பணி மேற்கொள்ளவில்லை. மழை நின்றவுடன் இப்பணி துவங்கி உடனுக்குடன் முடிக்கப்படும்'' என்றார்.