உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / உயிரைக் காவு வாங்கும் சாலையோர ஆக்கிரமிப்பு: அவிநாசியில் உண்ணாவிரதம்; அதிகாரிகள் சமாதானம்

உயிரைக் காவு வாங்கும் சாலையோர ஆக்கிரமிப்பு: அவிநாசியில் உண்ணாவிரதம்; அதிகாரிகள் சமாதானம்

அவிநாசி; அவிநாசியில் சேவூர் ரோடு மற்றும் மெயின் ரோட்டிலுள்ள ஆக்கிரமிப்புகளால், பொதுமக்களுக்கு ஆபத்து உள்ளதாக கூறி, அவற்றை அகற்ற பொதுமக்கள் உண்ணாவிரதம் இருந்தனர். அவிநாசி, கங்கவர் வீதியை சேர்ந்த கணேசன் மகன் ஹரிஷ் 13; கடந்த 26ம் தேதி,அவிநாசி சேவூர் ரோட்டில் தாலுகா அலுவலகம் முன்பு கார் மோதியதில் உயிரிழந்தான். 'சிசிடிவி' காட்சிகளின்படி, தாலுகா அலுவலகம் முன்பு, ரோட்டோரம் கடைகள் ஆக்கிரமிப்பும் விபத்துக்கு காரணமாக அமைந்தது தெரியவந்தது. நேற்று காலை புதிய பஸ் நிலையம் எதிரில், 100க்கும் மேற்பட்ட வணிகர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் மற்றும் அ.தி.மு.க., - பா.ஜ., - காங்., நா.த.க., - வி.சி.க., மற்றும் சமூக நல அமைப்பினர், வணிகர் சங்கத்தினர் இணைந்து, விபத்துகளுக்கு அச்சாரமாக உள்ள சாலையோர கடைகள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என புதிய பஸ் ஸ்டாண்ட் முன் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். அதில், பங்கேற்றோர் கூறியதாவது: கடந்த ஏப்., 21ல், நடுவச்சேரி பகுதியைச் சேர்ந்த ராஜன் 75, என்ற முதியவர், சேவூர் ரோட்டில் உள்ள காய்கறி கடைகளுக்கு லோடு இறக்க வந்த வேன் கதவை எதிர்பாராமல் டிரைவர் திறந்ததால் அடிபட்டு கீழே விழுந்து உயிரிழந்தார். கடந்த வாரம் ஈரோடு ரோட்டில் சந்தை கடை முன்பு ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்தனர். இரண்டு நாள் முன், தாலுகா ஆபீஸ் எதிரில், சாலையோர கடைகளின் ஆக்கிரமிப்பால் ரோட்டில் நடந்து சென்ற முதியவர்கள் மீது மோதாமல் விலகிச் சென்ற சிறுவன் ஹரிஷ் காரில் அடிபட்டு உயிரிழந்தான். இந்த நான்கு மாதங்களில் மட்டும், அவிநாசியில், ஏற்பட்ட விபத்துகளால் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். சூளையில் இருந்து புதிய பஸ் ஸ்டாண்ட் வரை உள்ள சாலையோர கடைகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. அதேபோல நாள்தோறும் நடைபெற்ற விபத்துகளால் கை, கால்கள் இழந்து உடல் ஊனமுற்றவர்களும் ஏராளம். எனவே, சாலையோர கடைகளையும், ஆக்கிரமிப்புகளையும் உடனடியாக அகற்ற வேண்டும. இவ்வாறு அவர்கள் கூறினர். டி.எஸ்.பி., சிவகுமார், நகராட்சி தலைவர் தனலட்சுமி, நெடுஞ்சாலைதுறையின் உதவி கோட்டப் பொறியாளர் செங்குட்டுவேல், தி.மு.க., நகர செயலாளர் வசந்த் குமார், தலைமை பொதுக்குழு உறுப்பினர் சரவணன்நம்பி ஆகியோர் உண்ணாவிரதம் இருந்தவர்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். மேலும், இன்று நகராட்சி அலுவலகத்தில், அதிகாரிகள் முன்னிலையில், தாசில்தாரின் உத்தரவுப்படி சாலையோர கடைகள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்ற தேதி முடிவு செய்வது என உறுதி அளிக்கப்பட்டது. இதனால், உண்ணாவிரதம் கைவிடப்பட்டது. ---- அவிநாசியிலுள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி, உண்ணாவிரதம் இருந்த பொதுமக்கள். சேவூர் ரோட்டில், வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த பேரிகார்டு வைக்கப்பட்டது. ஆக்கிரமிப்பு குறித்து ஆய்வு சூளை ஸ்டாப்பில் இருந்து புதிய பஸ் நிலையம் வரை உள்ள சாலையோர கடைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து நேற்று காலை அவிநாசி நகராட்சி தலைவர் தனலட்சுமி, கமிஷனர் வெங்கடேஸ்வரன் மற்றும் அதிகாரிகள், அவிநாசி நகராட்சி அலுவலகத்தில் இருந்து எம்.எல்.ஏ., அலுவலகம் வரை உள்ள சாலையோர கடைகளின் எண்ணிக்கை மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள் குறித்து ஆய்வு செய்தனர். தனியார் பள்ளிகளுக்கு செல்லும் வழியிலும்,முக்கிய ரோடு சந்திப்பின் பகுதிகளில் பேரிகார்டு வைத்து வாகனத்தின் வேகத்தை குறைத்து வருவதற்காக நடவடிக்கை எடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை