மேற்கூரை சோலார்தான் மேலான வழி; தொழில் நிறுவனங்கள் மின் செலவு கட்டுப்படும் ----------------------------------- 50 சதவீதம் மானியம் வழங்கினால் கைகூடும்
திருப்பூர்; ''திருப்பூர் தொழில் நிறுவனங்களின் மின் கட்டணச் செலவை கட்டுப்படுத்தும் வகையில், மேற்கூரை சோலார் கட்டமைப்பை நிறுவ, 50 சதவீத மானியம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் '' என, எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. திருப்பூர் பின்னலாடை தொழில்துறை மரபுசாரா எரிசக்தி நுகர்வை நோக்கி பயணிக்க துவங்கியுள்ளது. மொத்த தேவையை காட்டிலும், இரண்டு மடங்கு அதிகமாக காற்றாலை மின்சாரத்தை தொழில்துறையினர் உற்பத்தி செய்கின்றனர். அடுத்தகட்டமாக, சோலார் மின் உற்பத்தியிலும் கால்பதிக்க துவங்கிவிட்டனர்.ஆடை வடிவமைக்கும் பிரிவில் மட்டுமே, மின்நுகர்வு குறைவாக உள்ளது; பிற தொழில் பிரிவுகள் அனைத்திலும், மின் பயன்பாடு அதிகம். 'நிட்டிங்', சாய ஆலைகள் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்கள், காம்பாக்டிங், ரைசிங், பிரின்டிங் போன்ற தொழிற்சாலைகளில், மின் நுகர்வு அதிகம். குறிப்பாக, சாய ஆலைகளின் பொது சுத்திகரிப்பு நிலைய இயக்க செலவில், 40 சதவீதம் வரை மின் கட்டண செலவு ஏற்படுகிறது. மின் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளதும், நிலை கட்டணம் அபரிமிதமாக உயர்ந்ததும், தொழில் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக மாறிவிட்டது. மேற்கூரை சோலார் மூலம்70 சதவீத செலவு குறைப்புமின் கட்டண செலவை குறைக்க, சோலார் மின் சக்தி உற்பத்திக்கு மாற தொழில்துறையினர் விரும்புகின்றனர். சில நிறுவனங்கள், மேற்கூரை சோலார் அமைத்து, மொத்த மின் செலவில், 70 சதவீதம் வரை குறைத்துள்ளன. தற்போதைய விலைவாசி அடிப்படையில், ஒரு கிலோவாட் திறன் அமைக்க, 40 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது; அதிகபட்சம், 110 கிலோவாட் திறன் வரை, சோலார் கட்டமைப்பு அமைக்க வேண்டும். மேற்கூரை சோலார் கட்டமைப்பு செய்துள்ள நிறுவனங்கள், காலை, 8:00 முதல், மாலை, 6:00 வரை இயங்கினால், மொத்த மின் கட்டண செலவில், 75 சதவீதம் வரை சேமிக்கின்றன. காலை, 9:00 முதல், இரவு, 9:00 மணி வரை இயங்கினால், மின் கட்டண செலடு, 50 சதவீதம் குறைகிறது; 24 மணி நேரமும் தொடர்ந்து இயங்கும் நிறுவனங்கள் சோலார் அமைத்தால், 35 முதல், 45 சதவீதம் வரை மின் கட்டணம் குறைந்துள்ளதாக, தொழில்துறையினர் தெரிவிக்கின்றனர். சோலார் அமைக்கும் நிறுவனம், மின்வாரியத்திடமும் அனுமதி பெற வேண்டும்; தேவை போக, உபரியாக இருக்கும் மின்சாரத்தை, மின்வாரியம் எடுத்துக்கொள்ளும்; அதற்கு, யூனிட்டுக்கு, 3.50 ரூபாய் வீதம் கணக்கிட்டு, அதற்கான தொகையை வழங்கிவிடுகிறது. யூனிட்டுக்கு 1 ரூபாய் 70 பைசாதொழில்துறையினர் தவிப்புஇருப்பினும், சோலார் மின் உற்பத்தி செய்து, நிறுவனங்கள் பயன்படுத்தி வந்தாலும், மின்வாரியம் பொருத்தும் 'நெட் மீட்டர்' கட்டணமாக, யூனிட்டுக்கு, 1 ரூபாய் 70 பைசா வரை கட்டணம் விதிக்கப்படுகிறது. உதாரணமாக, 10 ஆயிரம் யூனிட் உற்பத்தி செய்து, அந்நிறுவனம் பயன்படுத்தினாலும், அதற்கு, 17 ஆயிரம் ரூபாய் வரை, கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. இத்தகைய கட்டணத்துக்கு, மின்வாரியம் சலுகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. மின்கட்டண செலவு, பலமடங்கு உயர்ந்து வருவதால், மேற்கூரை சோலார் கட்டமைப்பு நிறுவிட, தொழிற்சாலைகளுக்கு, 50 சதவீதம் வரை மானியம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது.மத்திய அரசு, வீடுகளுக்கு அறிவித்துள்ள, மானியத்துடன் கூடிய சோலார் திட்டத்தை, குறு, சிறு தொழில்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
'நெட் மீட்டர்' கட்டணம்
முழுமையாக ரத்தாகுமா?மேற்கூரை சோலார் அமைத்தால் மட்டுமே, அபரிமிதமான மின்சார செலவை கட்டுப்படுத்த முடியும். அதற்காக, 50 சதவீத மானியம் வழங்கும் சோலார் திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும். மேற்கூரை சோலார் அமைத்த பிறகு, யூனிட்டுக்கு, 1 ரூபாய் 70 பைசா வரை கட்டணம் விதிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு நடந்த போராட்டத்தால், அந்த கட்டணத்தை பாதியாக குறைப்பதாக அரசு ஒப்புக்கொண்டது. அதன்படி, 'நெட் மீட்டர்' கட்டணத்தையும் குறைக்க வேண்டும்; வாய்ப்பு இருந்தால், முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.- திருப்பூர் தொழில்துறையினர்.