பிராசசிங் நிறுவனங்களுக்கு ரூ.250 கோடி
திருப்பூர்; தமிழக அரசின் புதிய ஜவுளி கொள்கையில், பிராசசிங் நிறுவனங்களுக்காக, அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளுக்கு, 250 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது, திருப்பூரப் சாய ஆலைகளுக்கு பயனுள்ளதாக அமையும். தொழில்துறையினரிடமிருந்து பெறப்பட்ட பல்வேறு கோரிக்கைகள் மற்றும் உள்ளீடுகள் அடிப்படையில், தமிழக அரசின் புதிய ஒருங்கிணைந்த ஜவுளிக்கொள்கை, 13ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான அரசாணையும் வெளியாகியுள்ளது. தமிழக அரசின் புதிய ஒருங்கிணைந்த ஜவுளிக் கொள்கை - 2025-ல், அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளுக்கு, 'பிராசஸிங்' துறைக்கு 250 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. புதிதாக துவங்கும், சாய ஆலை, பிரின்டிங் நிறுவனம், பினிஷிங் நிறுவனம் போன்ற பிராசசிங் நிறுவனங்கள் மற்றும் தனியார் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு, 25 சதவீத மூலதன மானியம் வழங்கப்பட உள்ளது. அதிகபட்சமாக, ஒரு நிறுவனத்துக்கு, ஐந்து கோடி ரூபாய் வரை வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இயங்கி வரும் பிராசசிங் நிறுவனங்கள் விரிவாக்கம் மற்றும் சுத்திகரிப்பு நிலைய விரிவாக்கம் மற்றும் நவீனமாக்குவதற்காக, 25 சதவீத மூலதன மானியம் வழங்கப்படும்; அதற்கு, அதிகபட்சம், நான்கு கோடி ரூபாய் வரை வழங்கப்பட உள்ளது. தகுதிவாய்ந்த நிறுவனங்கள், தங்கள் விண்ணப்பத்தை விரிவான திட்ட அறிக்கையோடு, இரண்டு வழிமுறைகளில், ஒற்றை சாளர 'ஆன்லைன் போர்ட்டல்' மூலம் பதிவு செய்யலாம்; அனைத்து ஆவணங்களுடனும் சமர்ப்பிக்கப்பட வேண்டும். விண்ணப்ப படிவத்தை பெற்ற பிறகு, வழிகாட்டுதல்களை பின்பற்றி, தகுதி அளவுகோல்கள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் அடிப்படையில், தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு ஒப்புதலுக்காக பரிந்துரைக்கப்படும். குழு ஒப்புதல் கிடைத்த பின்னர், அங்கீகரிக்கப்பட்ட திட்டத்தின்படி விண்ணப்பதாரர் இயந்திரங்களை கொள்முதல் பணியை துவக்க வேண்டும். ஒப்புதல் பெற்ற பிறகு கொள்முதல் செய்யும் இயந்திரங்கள் மட்டுமே, மானியத்திற்கு தகுதி வாய்ந்ததாக எடுத்து கொள்ளப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூருக்கு பயன் திருப்பூரில் உள்ள பிராசசிங் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில், தமிழக அரசின் ஜவுளிக்கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. அதிகபட்ச மானியம் பெற்று, புதிதாக தொழில் துவங்கவும், இயங்கி வரும் பிராசசிங் நிறுவனங்களை விரிவாக்கம் செய்யவும், 25 சதவீத முதலீட்டு மானியம் வழங்கப்பட உள்ளது. பட்ஜெட் ஒதுக்கீடு, சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் வரையறுத்துள்ள நிபந்தனைகளின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கி, திட்டங்கள் தரவரிசைப்படுத்தி, மானிய உதவி பெற அங்கீகரிக்கப்படும். - ஆடிட்டர் அரசப்பன் அஸ்வின்,தமிழக அரசு திட்டங்களின் வழிகாட்டி ஆலோசகர்