உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  வார்டு சபாவில் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை; ஆளுங்கட்சி கவுன்சிலர் அதிருப்தி

 வார்டு சபாவில் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை; ஆளுங்கட்சி கவுன்சிலர் அதிருப்தி

அவிநாசி: 'வார்டு சபாவில் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை,' என்று ஆளுங்கட்சி கவுன்சிலர் அதிருப்தி தெரிவித்தார். அவிநாசி நகராட்சி கூட்ட அரங்கில், நகராட்சி தலைவர் தனலட்சுமி தலைமையில், கவுன்சிலர்கள் கூட்டம் நடந்தது. கமிஷனர் அருள் (பொறுப்பு) முன்னிலை வகித்தார். கவுன்சிலர்களின் விவாத தொகுப்பு: சித்ரா (அ.தி.மு.க.): சாலையோர வியாபாரிகளுக்கு முறையான அடையாள அட்டை பலருக்கு இன்னும் கிடைக்கவில்லை. தகுதியான சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்ரீதேவி (அ.தி.மு.க.): கைகாட்டிப்புதுார் பூங்காவுக்கு சுற்றுச்சுவர், உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு பொருட்கள் அமைத்து தர வேண்டும். விஸ்வபாரதி பார்க் பகுதிக்கு தார் சாலை அமைத்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. உடனடியாக தார் சாலை அமைத்து தர வேண்டும். திருப்பூர் ரோட்டில் அரசு டிம்பருக்கு செல்லும் மண் சாலையை தார் சாலையாக மாற்றி அமைக்க வேண்டும். தங்கவேலு (தி.மு.க.): கடந்த மாதம் நடைபெற்ற சிறப்பு வார்டு சபா கூட்டத்தில் சாக்கடை, தெருவிளக்கு மற்றும் குடிநீர் இணைப்பு ஆகியவற்றை பொதுமக்கள் சார்பில் செய்து தர மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பொது நிதி ஒதுக்கப்பட்ட பின்னரும், பணிகள் துவங்குவதற்கு கூட்டத்தில் தீர்மானம் வைக்கப்படாமல் உள்ளது. சசிகலா (தி.மு.க.) : 7வது வார்டு வி.எஸ்.வி. காலனி பகுதியில் சாக்கடை கால்வாய் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதில், சாந்தலிங்கம் வீடு முதல் திருஞானம் வீடு வரை உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தற்போதைய கால்வாய் விட தாழ்வாக உள்ளது. இதனால், கழிவுநீர் வெளியேறாத நிலையில் தேங்கி நிற்கிறது. எனவே, சாக்கடை கால்வாய் கட்டும் நீளத்தின் அளவை நீட்டிப்பு செய்ய வேண்டும். தனலட்சுமி (தலைவர்): விரைவில் அந்தந்த வார்டு பகுதிகளில் பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ