துாய்மை பணியாளர் பிரச்னை; பா.ஜ., அண்ணாமலை சாடல்
அவிநாசி: ''துாய்மை பணியாளர்களின் பிரச்னையை, முதல்வர் நினைத்தால், ஒரு நிமிடத்தில் முடிக்கலாம். ஆனால், எதற்காக இன்னும் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர் என்று தெரியவில்லை,'' என அண்ணாமலை கேள்வி எழுப்பினார். திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: அவிநாசி - அத்திக்கடவு திட்டம் இன்னும் முழுமையாக நிறைவேறவில்லை. 1,400 குளம் மற்றும் குட்டைகள் இரண்டாவது திட்டத்தில் இணைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதையும் இந்தத் திட்டத்துடன் சேர்த்து அறிவிக்க வேண்டும். ஒரு பகுதி மக்களுக்கு ஒரு திட்டமும் அதே திட்டம் இன்னொரு பகுதி மக்களுக்கு இல்லை என்பதை சரி செய்ய வேண்டும். தி.மு.க., அரசு செவிகொடுத்து பெயருக்காக இந்தத் திட்டத்தை செயல்படுத்தாமல் முழுமையாக செயல்படுத்த வேண்டும். ஆக., 22ம் தேதிக்குள் மீதமுள்ள குளம் குட்டைகளுக்கு தண்ணீர் நிரப்பி, மின் பிரச்னைகளும் சரி செய்யப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். அதன்படி நிறைவேற்றப்படாவிட்டால் மீண்டும் போராட்டத்தை கையில் எடுப்போம். துாய்மை பணியாளர்கள் அடிப்படை உரிமைகளை வேண்டி போராடி வருகின்றனர். முதல்வரும், பல்வேறு அமைச்சர்களும் பேச்சுவார்த்தை நடத்துகிறோம் என்று சொல்கின்றனர். சென்னையைப் பொறுத்தவரை 'துாய்மை பாரதம்' தரவரிசையில் அதல பாதாளத்தில் உள்ளது. ஒப்பந்த அடிப்படையில் உள்ள துாய்மை பணியாளர்களுக்கு சரியான சம்பளம் கொடுக்கப்படுவதில்லை. அரசு வரையறுத்த தொகை கூட அவர்களுக்கு செல்வதில்லை என்பது வேதனையாக உள்ளது. இவ்வாறு அண்ணாமலை கூறினார். கொங்கு மண்டலத்திற்கு மகிழ்ச்சியான செய்தி பிரதமர் மோடி தருவார்: அண்ணாமலை அவிநாசியில், நேற்று 'அத்திக்கடவு நாயகன்' என்ற அத்திக்கடவு - அவிநாசி திட்ட போராட்டக்குழு முன்னோடி அம்பலவாணன் செட்டியாரின் வாழ்க்கை வரலாற்று நுால் வெளியீட்டு விழா நடந்தது. தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை, நுாலை வெளியிட்டு பேசியதாவது: அத்திக்கடவு - அவிநாசி திட்டம் நிறைவேற போராடியவர்கள் குறித்து இந்த நுால் விவரிக்கிறது. ஆக., மாதம் முடியும் முன்பு எல்லா குளம், குட்டைகளும் நிரம்பும் வகையில், அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும். அதன்பின், இரண்டாம் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட வேண்டும். விரைவில் ஒரு மகிழ்ச்சிகரமான செய்தி கொங்கு மண்டலத்துக்கு வர உள்ளது. அதை பிரதமர் நரேந்திர மோடி தர இருக்கிறார். அது நல்லபடியாக முடியட்டும். இவ்வாறு அவர் பேசினார். குளம் குட்டைகளுக்கு நீர் நிரப்பும் இயக்கத்தின் செயலாளர் பெரியசாமி முதல் பிரதியை பெற்றுக் கொண்டார். அம்பலவாணன் செட்டியார் குடும்பத்தினர், அத்திக்கடவு அவிநாசி திட்ட போராட்ட குழுவினர் மற்றும் பா.ஜ.,வினர் உட்பட பலர் பங்கேற்றனர்.