துாய்மை பணியாளர்கள் கைது
திருப்பூர்: சம்பள பிரச்னையில் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடச் சென்ற துாய்மைப் பணியாளர்கள் நடுவழியில் நிறுத்தி கைது செய்யப்பட்டனர். திருப்பூர் மாநகராட்சியில் தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் கீழ் துாய்மைப் பணியாளர்கள், 2,500 பேர் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு அரசு நிர்ணயித்த சம்பளம் வழங்க வேண்டும், பி,எப். பிடித்தம் உட்பட கோரிக்கைகள் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ளன. இப்பிரச்னை குறித்து பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதும், பேச்சு நடத்துவதும், பின்னர் பிரச்னைகள் தீர்வு காணப்படாமல் தொடரு வதும் வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில், நிர்ணயித்த சம்பளம், போனஸ் உள்ளிட்ட பிரச்னைகளை வலியுறுத்தி திடீர் வேலை நிறுத்தம் நடத்தினர். பேச்சு நடத்திய ஒப்பந்த நிறுவனம் இம்மாதம் வழங்கு வதாகத் தெரிவித்தது. இதனால், போராட்டத்தை கைவிட்டு வேலைக்கு அவர்கள் திரும்பினர். உறுதியளித்தவாறு சம்பளம் வழங்காததால், 3 மற்றும் 4 வது மண்டலங்களில் பணியாற்றும் பணியாளர்கள் நேற்று மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட ஊர்வலமாக சி.ஐ.டி.யு. தொழிற்சங்க செயலாளர் ரங்கராஜ் தலைமையில், தாராபுரம் ரோட்டில் வந்தனர். தகவல் அறிந்து விரைந்த போலீசார் நடுவழியில் தடுத்து நிறுத்தி, கைது செய்து, ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். போலீசார் ஏற்பாட்டின்படி, மாநகராட்சி அலுவலர்கள் முன்னிலையில், ஒப்பந்த நிறுவனத்தினருடன் பேச்சு நடந்தது. நீண்ட நேரம் நடந்த பேச்சின் முடிவில், இம்மாதம் முதல் நிர்ணயித்த சம்பளம் வழங்குவது, 20ம் தேதி சம்பள ரசீது வழங்குவது என்று தெரிவிக்கப்பட்டது. வாடகை பிரச்னையைப் பொறுத்தவரை, இது குறித்து மேயர், துணை மேயரிடம் ஆலோசித்து தங்கள் முடிவை தெரிவிப்பதாக ஒப்பந்த நிறுவன தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால், பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது. கைது செய்யப்பட்ட பணியாளர்கள் விடுவிக்கப்பட்டனர்.