உயிரிழப்புகள் தடுக்க உதவும் இன்னுயிர் காப்போம் திட்டம்
திருப்பூர்: குண்டடம் ஒன்றியம், காங்கேயம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், 'வருமுன் காப்போம்' திட்ட மருத்துவ முகாம் நேற்று நடந்தது.மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி தலைமை வகித்தார். அமைச்சர் சாமிநாதன், மருத்துவ முகாமை துவக்கி வைத்தார். காங்கயம் ஒன்றியம், சிவன்மலை ஊராட்சியில் நடந்த விழாவில் பங்கேற்றார். 15வது நிதிக்குழு மானியத்தில், 22.64 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிறைவடைந்த பணிகளை திறந்து வைத் தார். 4.90 லட்சம் ரூபாய் மதிப்பிலான, ஊராட்சி நிதியில் பெறப்பட்ட, இழுவை இயந்திரத்தை, மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கினார்.அமைச்சர் பேசுகையில், ''இன்னுயிர் காப்போம்; நம்மை காக்கும் - 48 என்ற திட்டத்தை முதல்வர் துவக்கி வைத்துள்ளார். அதன்வாயிலாக சாலை விபத்தில் உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க, உடனடி சிகிச்சை கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது,'' என்றார்.முன்னதாக, சிவன்மலை ஊராட்சி அலுவலகத்தில், போட்டியில் வெற்றி பெற்ற மாணவர், அமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.