வரும் 26ம் தேதி பள்ளிகளில் மேலாண்மைக்குழு கூட்டம்
உடுமலை,: பாலியல் வன்கொடுமைகள் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்த, பள்ளிகளில் சிறப்பு பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் வரும் 26ம் தேதி நடக்கிறது.பள்ளி மாணவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பாலியல் வன்கொடுமைகள், அதற்கான தடுப்புச்சட்டங்கள், தற்காப்பு மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு அலகு, அமைப்புகள், போக்சோ சட்டம், சைல்டு லைன் உள்ளிட்டவை குறித்து, அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு மாநிலம், மாவட்டம், வட்டார அளவில் விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது.இதன் அடுத்தகட்டமாக, பெற்றோருக்கும் இந்த விழிப்புணர்வு ஏற்படுத்த, சிறப்பு பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் அரசுப்பள்ளிகளில் வரும் 26ம் தேதி நடக்கிறது.இது குறித்து, பள்ளிக்கல்வித்துறையின் சார்பில், தலைமையாசிரியர்களுக்கு வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.இக்கூட்டத்தில், பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கபட்ட மாணவர்களுக்கு ஆதரவான சூழலை உருவாக்குதல், முறையாக புகார் தெரிவிப்பது, மாணவர் பாதுகாப்பு குழு உருவாக்குதல், மாணவர் மனசு பெட்டி, உடல்நலம் குறித்த விழிப்புணர்வு உள்ளிட்டவை குறித்து ஆசிரியர்கள் கூட்டத்தில் கலந்துரையாடுவதற்கும், அதன் தொடர்ச்சியாக நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.