மொபட் மீது டிராக்டர் மோதி பள்ளி ஆசிரியை, மாணவி பலி
காங்கேயம்:திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அடுத்த இந்திரா நகரை சேர்ந்தவர் சரஸ்வதி, 50; அகலரப்பாளையம் புதுார் அரசு ஆரம்ப பள்ளி ஆசிரியை. வழக்கம் போல் மொபட்டில் நேற்று காலை பள்ளிக்கு புறப்பட்டார். இவர் வீட்டருகே உள்ள, தாத்தா வீட்டுக்கு வந்திருந்த கார்த்திக் என்பவரின் மகள்களான அதே பள்ளியில் படிக்கும் ஐந்தாம் வகுப்பு மாணவி ராகவி, 10, மூன்றாம் வகுப்பு படிக்கும் அவரது தங்கை யாழினி, 8, ஆகியோரும் வருவதாக கூறவே, இருவரையும் மொபட்டில் சரஸ்வதி ஏற்றிக்கொண்டார்.சொரியங்கிணத்துப்பாளையம் பகுதியில் சென்றபோது, எதிரே வந்த டிராக்டர் மொபட் மீது மோதியதில் சரஸ்வதி, ராகவி தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியாகினர். படுகாயமடைந்த யாழினி திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். டிராக்டர் டிரைவர் அஜித்குமார், 27, என்பவரை, வெள்ளகோவில் போலீசார் கைது செய்தனர்.