கொளுத்தும் வெயில்; பாத்திர உற்பத்தி பாதிப்பு
திருப்பூர், அனுப்பர்பாளையம், 15 வேலம்பாளையம், ஆத்துப்பாளையம், அங்கேரிபாளையம் ஆகிய பகுதிகளில், 250 பாத்திர உற்பத்தி பட்டறைகள் உள்ளன. இவற்றில், எவர்சில்வர், பித்தளை, செம்பு ஆகிய உலோகங்களில், தினமும், ஏறத்தாழ, 50 லட்ச ரூபாய் மதிப்பிலான பாத்திரம் உற்பத்தி செய்யப்படுகிறது.உற்பத்தி செய்யப்படும் பாத்திரங்கள் தமிழகம் மற்றுமின்றி வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தற்போது, கோடை வெயில் கடுமையாக உள்ளது.தொழிலாளர்கள் வரத்து குறைவால் பாத்திர உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. பாத்திர உற்பத்தி ஒரு குடிசை தொழில். பெரும்பான்மையான பட்டறைகள் கான்கிரீட் கட்டடங்களில் நடப்பது இல்லை.சிறிய அளவில் ஓடு, சிமென்ட் ஷீட், தகர ஷீட் போன்றவற்றால் அமைக்கப்பட்ட செட்களில் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது, வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், தொழிலாளர்கள் வேலை செய்ய முடிவதில்லை.அதனையும் மீறி செய்தால் உடல் நிலை பாதிக்கப்படுவதாக தொழிலாளர் கூறுகின்றனர். வயதான தொழிலாளர்கள் வேலைக்கு வருவதில்லை.வெயிலில் இருந்து தப்பிக்க தொழிலாளர்கள் காலை 9:00 மணி முதல் 11:00 மணி வரையும், அதுபோல் மாலை 4:00 மணி முதல் 7:00 மணி வரை வேலை செய்வதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். சில பட்டறை தாரர்கள் தொழிலாளர்களுக்கு விடுப்பு விட்டுள்ளனர். இதனால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.