அமராவதி பகுதிகளில் இரண்டாம் பருவம் நெல் சாகுபடி; வேளாண் துறை அதிகாரிகள் அறிவுறுத்தல்
உடுமலை; அமராவதி பழைய ஆயக்கட்டு பகுதிகளில், இரண்டாம் போகம் நெல் சாகுபடி துவங்கியுள்ள நிலையில், சாகுபடி தொழில் நுட்பங்கள், இடுபொருள் மேலாண்மை குறித்து வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.உடுமலை வேளாண் உதவி இயக்குனர் தேவி கூறியதாவது:உடுமலை வட்டாரம், கல்லாபுரம், ராமகுளம் உள்ளிட்ட அமராவதி பழைய ஆயக்கட்டு பாசன பகுதிகளில், தற்போது நெல் இரண்டாம் போகம் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.விவசாயிகள், நெல் நடவுக்கு நிலம் தயார் செய்யும் போது, அடியுரமாக ஏக்கருக்கு இரண்டரை மூட்டை, சூப்பர் பாஸ்பேட் மற்றும் 37.5 கிலோ யூரியா, 12.5 கிலோ பொட்டாஷ், அரை கிலோ வேளாண்மை விரிவாக்கம் மையத்திலுள்ள, அசோஸ்பைரிலம், பாஸ்போபேக்டீரியா பொட்டாசியம் பாக்டீரியா, ஜிங்க் பாக்டீரியா ஆகியவற்றை கலந்து ஒரு நாள் வைத்திருந்து அடியுரமாக இட வேண்டும்.நடவிற்கும் முன், வேளாண் விரிவாக்கம் மையங்களிலுள்ள, நுண்ணுாட்ட உரம் ஏக்கருக்கு, 5 கிலோ, 10 கிலோ மணலுடன் கலந்து, வயல்களில் விசிறி விட்டு, அதற்கு பின் நடவு செய்ய வேண்டும்.இவ்வாறு செய்தால், சூப்பர் பாஸ்பேட் இடுவதால், நெல் நாற்றுங்களில் வேர் வளர்ச்சி அதிகமாகிறது. பயிர்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பெறுகிறது; பூச்சி நோய் தாக்குதல் குறைகிறது.பாஸ்போ பாக்டீரியா இடுவதன் வாயிலாக, மண்ணில் உள்ள மணிச்சத்துக்களை கரைய வைத்து, பயிரின் வேர் எளிதாக எடுத்துக்கொள்ள உதவுகிறது.அசோஸ்பைரில்லம் இடுவதால், தளைச்சத்து உரமும்,பொட்டாஷ் பாக்டீரியா ஜிங்க் பாக்டீரியா வாயிலாக, பொட்டாஸ் உரம் பயன்படுத்துவதை குறைக்கலாம்.மேலுரமாக, 105 நாள் வயதுடைய நெல் ரகங்களுக்கு, நடவு செய்த, 35 முதல் 40 வது நாளில், 37.5 கிலோ யூரியா 37.5 மற்றும் 12.5 கிலோ பொட்டாஸ், இரண்டாவது மேலுரமாக, 45 முதல், 50 வது நாளில், 37.5 கிலோ யூரியா, 12.5 கிலோ பொட்டாஸ்,மூன்றாவது மேலுரமாக, 70 முதல் 75 ஆவது நாளில் 37.5 கிலோ யூரியா, 12.5 கிலோ பொட்டாஸ் உரம் போதுமானதாகும்.இவ்வாறு, உரங்களை நான்கு முறையாக பிரித்து போடுவதன் வாயிலாக, சிறந்த மகசூல் பெற முடியும்.இவ்வாறு, தெரிவித்துள்ளார்.