ஆற்றின் கரையோர கிராமங்களில் பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்
உடுமலை; உடுமலை ஒன்றியத்தில், அமராவதி ஆற்றின் கரையோர கிராமங்களில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.உடுமலை அருகே அமராவதி அணைக்கு, நீர்வரத்து அதிகரித்து வரும் நிலையில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது.இதனால், அமராவதி ஆற்றின் கரையோர கிராமங்களான கல்லாபுரம் பகுதியில், பொதுமக்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளை, ஒன்றிய நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது.அரசுப்பள்ளி கட்டடங்கள், சமுதாய நலக்கூடங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் கரையோர குடியிருப்புகளில் உள்ள பொதுமக்களை பாதுகாப்பான இடத்துக்கு மாற்றுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மேலும் ஆபத்தான சூழலில், உதவிபெறுவதற்கு அழைப்பதற்கான தொலைபேசி எண்கள் குறித்தும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு இயந்திரங்கள், மணல் மூட்டைகளை தயார் நிலையில் வைத்திருப்பதற்கும், ஊராட்சி நிர்வாகங்களுக்கு ஒன்றிய நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.