உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கலெக்டர் அலுவலகம் முன் சீமைக்கருவேல் காடு?

கலெக்டர் அலுவலகம் முன் சீமைக்கருவேல் காடு?

திருப்பூர்; திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில், சீமைக்கருவேல மரங்களை அகற்றிவிட்டு, பசுமை மரக்கன்றுகள் நட்டு வளர்க்க வேண்டும்.இயற்கை அன்னையை பசுமையால் போர்வை போர்த்தி, பல்லுயிர் சூழலுக்கு ஆதாரமாக உள்ள மரங்கள், பாதுகாக்கப்பட வேண்டும். அதேநேரம், ஒரு சில மரங்களை வெட்டி அழிக்கவும், பரவாமல் தடுப்பதும் மிகவும் அவசியமாகிறது.அழிக்கப்பட வேண்டிய பட்டியலில், மிக முக்கியமானதாக சீமைக் கருவேல மரங்கள் உள்ளன. வேலி மர வகையைச் சேர்ந்த, முட்கள் நிறைந்த இந்த மரங்களால், எந்த பயனும் இல்லை.நீர் நிலை ஓரங்களில் வளர்ந்து நிற்கும் இம்மரங்கள், நீர் வழித்தடத்தை சேதப்படுத்திவிடுகின்றன. எத்தகைய வறட்சியையும் தாங்குவதால், கருவேல மரங்கள் அனைத்து இடங்களிலும் சுலபமாக வளர்ந்து விடுகின்றன.திருப்பூர் - பல்லடம் ரோட்டில், ஏழு தளங்களுடன் ஒருங்கிணைந்த கலெக்டர் அலுவலக வளாகம் செயல்படுகிறது. பரந்து விரிந்த கலெக்டர் அலுவலக வளாக சுற்றுப்பகுதி முழுவதும், பயனற்ற, சீமை கருவேல மரங்களே வளர்ந்து நிற்கின்றன.தொடர்ந்து புதிது புதிதாக கருவேல மரங்கள் முளைத்துக்கொண்டிருக்கின்றன.ரோட்டோரம், பொது இடங்களில், பயன்தரும் மரங்கள் அனுமதியின்றி வெட்டப்படுவதை வேடிக்கை பார்க்கும் வருவாய்த்துறை அதிகாரிகள், கலெக்டர் அலுவலக வளாகத்தை சுற்றி வளைக்கும் வகையில், வேகமாக வளர்ந்துவரும் சீமை கருவேல மரங்களையும் கண்டுகொள்வதே இல்லை.முழுவதும் முட்செடிகளே வளர்ந்துள்ளதால், பறவைகள் அந்தப்பக்கம் எட்டியும்கூட பார்ப்பதில்லை. புதர்களுக்குள் பதுங்கியுள்ள பாம்புகள், அவ்வப்போது கலெக்டர் அலுவலகத்துக்குள் புகுந்து, பொதுமக்களையும், அரசு அலுவலர்களையும் மிரட்டுகின்றன.அடுத்த சில ஆண்டு களுக்குள், சீமை கருவேலம் காட்டுக்குள், கலெக்டர் அலுவலகம் சென்றுவிடும் நிலை ஏற்பட்டுவிடும் அபாயம் உள்ளது.அந்நிலை ஏற்படுவதற்கு முன், அரசு அதிகாரிகள் விழித்துக்கொள்ளவேண்டும். வளாகம் முழுவதும் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை, வேரோடு பெயர்த்தெடுத்து, அகற்றவேண்டும்.வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தில், கலெக்டர் அலுவலக வளாகம் முழுவதும், தேக்கு, மா, மகோகனி, வேம்பு போன்ற பல்லுயிர் சூழல் பெருக்கத்துக்கு இடம் கொடுக்கும், பயன்தரும் மரக்கன்று கள், பூச்செடிகளை நட்டு வளர்க்கவேண்டும்.கலெக்டர் அலுவலக வளாகத்தை, பசுமை சோலைக்குள் கொண்டுவர கலெக்டர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, இயற்கை ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை