உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சீமைக்கருவேல மரங்கள் ரூ.62.10 லட்சத்திற்கு ஏலம்; வனச்சூழலை பாதுகாக்க கண்காணிப்பு அவசியம்

சீமைக்கருவேல மரங்கள் ரூ.62.10 லட்சத்திற்கு ஏலம்; வனச்சூழலை பாதுகாக்க கண்காணிப்பு அவசியம்

உடுமலை; ஆனைமலை புலிகள் காப்பகம், அமராவதி, உடுமலை வனச்சரகங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை வெட்டி எடுத்துக்கொள்ள நடந்த ஏலத்தில், ரூ. 62.10 லட்சத்திற்கு ஏலம் போனது. வனச்சூழல் பாதிக்காத வகையிலும், முறைகேடுகளை தடுக்கவும் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை, அமராவதி வனச்சரகத்தில், வனச்சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில், உடுமலை வனச்சரகத்தில், 25 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள, 335.75 டன் எடையளவுள்ள சீமைக்கருவேல மரங்களை வெட்டி எடுத்துக்கொள்ள ஏலம் நடந்தது. அமராவதி வனச்சரகத்தில் 25 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள, 527.20 டன் எடை அளவுள்ள சீமைக்கருவேல மரங்களையும் வெட்டி எடுத்துக்கொள்ளும் அனுமதி அளிப்பதற்கான ஏலம் நடந்தது. உடுமலை மாவட்ட வன அலுவலகத்தில், ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் ராஜேஸ் தலைமையில் நடந்த ஏலத்தில், உடுமலை, பொள்ளாச்சி, திண்டுக்கல், கரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து, 81 வியாபாரிகள் பங்கேற்றனர். இந்த ஏலத்தில், உடுமலை வனச்சரகத்திலுள்ள சீமைக்கருவேல மரங்கள், 16 லட்சத்து, 10 ஆயிரம் ரூபாய்க்கும், உடுமலை வனச்சரக பகுதியிலுள்ள சீமைக்கருவேல மரங்கள், 46 லட்சம் ரூபாய்க்கும் என மொத்தம், 62 லட்சத்து, 10 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது. கவனம் தேவை வனப்பகுதியிலுள்ள சீமைக்கருவேல மரங்கள் ஆய்வு செய்து, இரு வனச்சரகங்களிலும், தலா, 25 ஹெக்டேர் பரப்பளவிலுள்ள மரங்கள், உயரம், அகலம் உள்ளிட்டவை ஆய்வு செய்து, எடை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதோடு, வெட்டுவதற்கு ஏலம் விடப்பட்டுள்ள மரங்களுக்கு, எண் அளிக்கப்பட்டுள்ளது. சீமைக்கருவேல மரங்கள் வெட்டும் போது, மற்ற மரங்கள் வெட்டவோ, மற்ற மரங்கள், செடி, கொடிகள் என வனச்சூழல் பாதிக்காத வகையில், குறியிடப்பட்டுள்ள இந்த மரங்களை மட்டுமே வெட்ட வேண்டும், என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். வனப்பகுதியில், வேம்பு, புளி, மந்தாரை, குடை சீத்தா, கருவேலன், வெள்ளை வேலான், இலந்தை, இலுப்பை என, பல நுாறு ஆண்டுகள் வயதுடைய பல்வேறு ரக மரங்கள் அதிகளவு காணப்படுகிறது. இவற்றுக்கு மத்தியில், சீமைக்கருவேல மரங்கள் உள்ளன. கடந்த ஆறு மாதத்திற்கு முன், நடந்த ஏலத்தின் போது, ஏலம் விடப்பட்ட மரங்களை தவிர மற்ற பல்வேறு ரக மரங்கள் வெட்டப்பட்டன. அனுமதிக்கப்பட்ட எல்லை தாண்டியும், பல ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டது. தற்போதும், சீமைக்கருவேல மரங்களை அகற்ற ஏலம் விடப்பட்டுள்ளது. மீண்டும் முறைகேடுகளை தடுக்கும் வகையில், தற்போது விடப்பட்டுள்ள, 25 ஹெக்டேர் பரப்பளவு குறித்து எல்லை கற்கள் நியமித்து, அதற்கு மேல் செல்ல அனுமதிக்கக்கூடாது. அதே போல், மற்ற ரக மரங்களை வெட்டுவதை தடுக்க, வனத்துறையினர் கண்காணிப்பு பணி மேற்கொள்ளவும், பிற பகுதிகளிலிருந்து ஆய்வுக்கு சிறப்பு குழு அதிகாரிகளை நியமிக்க வேண்டும். வனச்சூழல் பாதிக்காத வகையில், அகழ்வு இயந்திரம் உள்ளிட்ட அதிக சப்தம் வரும் மற்றும் வனச்சூழல் பாதிக்கும் வகையிலான இயந்திரங்களை அனுமதிக்கக்கூடாது. மரங்களை ஏற்றுவதற்கு, லாரி உள்ளிட்ட வாகனங்கள் செல்வதற்கு, வனத்திற்குள் ரோடு அமைக்க அனுமதிக்கக்கூடாது. அதிக விலைக்கு ஏலம் போயுள்ளதால், கூடுதல் பரப்பளவில், பிற ரக மரங்களும் வெட்டும் அபாயம் உள்ளதால், முறைகேடுகள் நடக்காமல் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும், என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ