உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கண்களை விற்று சித்திரம் வாங்குவதா?; இன்று, தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்

கண்களை விற்று சித்திரம் வாங்குவதா?; இன்று, தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்

இன்றைய சூழலில், பணம் மட்டுமே வாழ்க்கையின் பிரதானமாக மாறிப் போயிருக்கிறது. இதில், உடல் ஆரோக்கியத்தை பலரும் மறந்து போய் விடுகின்றனர். அதன் விளைவு, நடுத்தர வயதிலேயே நாள்பட்ட வியாதிகளும் வந்துவிடுகிறது.தொழில் நகரம் என்ற அந்தஸ்து பெற்ற திருப்பூரில், பல்வேறு மாவட்ட, பிற மாநில மக்கள் வசிக்கின்றனர். 'பணம், பொருள் ஈட்டும் ஆற்றல் அதிகரித்து வரும் அதே நேரம், புற்றுநோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது' என்பது ஆய்வறிக்கை தெரிவிக்கும் வேதனையான உண்மை. 'கண்களை விற்று சித்திரம் வாங்குவதா?' என் வார்த்தை சால பொருந்துவதாக அமைந்திருக்கிறது.திருப்பூரில், கடந்த, 2012ல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 1,443 பேர் (ஆண்கள், 700 பேர்; பெண்கள், 743 பேர்). கடந்தாண்டு, 2023ல், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணக்கை, 3,071 (ஆண்கள், 1,514 பேர்; பெண்கள், 1,557 பேர்) என்கிறது, புள்ளிவிபரம். கடந்த, 12 ஆண்டில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது. பலவகை புற்றுநோய் இருப்பினும், ஆண்களை பொறுத்தவரை நுரையீறல் புற்றுநோய், பெண்கள், மார்பக மற்றும் கர்ப்பபை வாய் புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.புற்றுநோய் வருவதற்கு 'ஜெனடிக்' எனப்படும் குடும்ப பின்னணி உள்ளிட்ட காரண, காரணங்கள் இருப்பினும் உணவு பழக்கம், சுத்தம், சுகாதாரம், ரசாயன மாசு என, கண்முன்னே கண்டறியக்கூடிய பல காரணங்களும் இருக்கத்தான் செய்கின்றன.

குணப்படுத்த முடியும்

புற்றுநோய் பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்துவிட்டால், குணப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும். குறிப்பாக மார்பக புற்றுநோய், கர்ப்ப பை வாய் புற்றுநோய், துவங்கிய நாள் முதல், நான்காவது கட்டத்தை எட்டும் வரை இடைவெளி இருக்கும். இந்த இடைவெளியில் ஏதாவது ஓரிடத்தில் கண்டறிந்துவிட்டால் கூட, குணப்படுத்திவிட முடியும். வாயில் சிறிய புண் ஏற்பட்டாலோ, உடலில் ஏதாவது ஓரிடத்தில் வலியுடன் அல்லது வலி இல்லாத கட்டி எதுவும் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்து பார்த்துக் கொள்ள வேண்டும்.- சுரேஷ்குமார், திருப்பூர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனை புற்றுநோய் சிறப்பு மருத்துவர்பொதுமக்கள் மத்தியில் கேன்சர் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஆண்டுதோறும், நவ., 7 ம் தேதி, தேசிய கேன்சர் விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்தாண்டின் மையக் கருத்தாக, நம்பிக்கையுடன், இதய பூர்வமாக புற்றுநோயை எதிர்த்து போராடுங்கள் என்ற கருத்து முன்வைக்கப்பட்டிருக்கிறது

எண்ணெயில் ஏகப்பட்ட வில்லங்கம்

தொழிலாளர்கள் நிரம்ப உள்ள திருப்பூரில் திரும்பிய பக்கமெல்லாம் ஓட்டல்கள், சாலையோர உணவகங்களில் வடை, பஜ்ஜி, சிக்கன் உள்பட விதவிதமாக எண்ணெயில் பொரித்த உணவுகள் விற்கப்படுகின்றன. அதிலும் சாலையோர உணவகங்களில் எண்ணெயில் பொரித்த உணவுகள் அதிகம் விற்கப்படுகின்றன. 'இவ்வகை உணவுகளை தொடர்ச்சியாக உண்பதால், உடலில் கொழுப்புச்சத்து அதிகரித்து, மாரடைப்பு உள்ளிட்ட உடல் உபாதை ஏற்படும்' என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.'ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்தி தயாரிக்கும் உணவுகளை சாப்பிடுவதால் குடல்புண் (அல்சர்), புற்றுநோய் வர வாய்ப்பு அதிகம் உள்ளது' என எச்சரிக்கின்றனர், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள். எனவே தான், சாலையோரக் கடைகள், ஓட்டல்களில் பயன்படுத்திய எண்ணெயை வாங்கி, அவற்றை சுத்திகரித்து, பயோ டீசலாக மாற்றி விற்பனை செய்யும் பணியும் நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி