காலாவதி தேதி குறிப்பிடாமல் உணவுப்பொருட்கள் விற்பனை
பல்லடம்; பல்லடம் வட்டாரத்தில், 6 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். பொதுமக்கள், தங்களின் பல்வேறு தேவை களுக்காக பல்லடம் வருகின்றனர். இவ்வாறு, பல்லடத்தில் உணவுப் பொருள் உட்பட பல்வேறு பொருட்களையும் நுகர்வு செய்யும் பொதுமக்கள், அவற்றின் தரம், சுகாதாரம் உள்ளிட்டவை குறித்து ஆராய்வதில்லை. இதன் காரணமாக, காலாவதியான, கெட்டுப்போன உணவுப் பொருட்களின் விற்பனை பல்லடம் பகுதியில் பல்கிப் பெருகி விட்டது. குறிப்பாக, வீடுகளில், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தும் சிப்ஸ், முறுக்கு, மிக்சர் உள்ளிட்ட தின்பண்டங்களில்தான் அதிக கலப்படம் உள்ளது. தரமற்ற பொருட்கள், எண்ணெய் உள்ளிட்டவற்றால் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களில், தயாரிப்பு, காலாவதி தேதி, எடை, சேர்க்கப்படும் பொருட்கள் உள்ளிட்ட எந்த விவரங்களும் இருப்பதில்லை.தயாரிப்பு தேதியை எப்போது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம் என்பதுபோல், ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டே விற்பனைக்கு வருகின்றன. உணவுப் பொருள் பாதுகாப்புத் துறையின் அனுமதியின்றி மார்க்கெட்டில் விற்பனைக்கு வரும் உணவுப் பொருட்களால், பொதுமக்களுக்கு, உடல் ரீதியாக பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.இது போன்ற உணவு பொருட்கள் பரவலாக விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், உணவு பாதுகாப்புத் துறையும் கண்டுகொள்ளாமல் உள்ளது. பொதுமக்களின் நலன் கருதி, உணவுப் பொருட்கள் விற்பனையை நிறுத்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.