வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணிகள் துவங்கியது! மேல் முறையீடுகளை கலெக்டர் விசாரிப்பார்
திருப்பூர்:  தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி, திருப்பூர் மாவட்டத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் துவங்கியுள்ளன. இதுதொடர்பாக, அனைத்து அரசியல் கட்சியினரை அழைத்து, விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பதிவு அலுவலரின் முடிவுக்கு எதிரான முதல் மேல்முறையீட்டை, மாவட்ட தேர்தல் அதிகாரி(கலெக்டர்) விசாரிப்பார். பீஹார் மாநிலத்தை போலவே, தமிழகம் உள்பட ஒன்பது மாநிலங்கள் மற்றும் மூன்று யூனியன் பிரதேசங்களில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.  திருப்பூர் மாவட்டத்திலுள்ள எட்டு சட்டசபை தொகுதிகளில், மொத்தம் 24 லட்சத்து 27 ஆயிரத்து 50 வாக்காளர்கள் உள்ளனர். தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி, மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள், தீவிர திருத்தத்துக்கான பணிகளை முழுவீச்சில் மேற்கொண்டுவருகின்றனர். எட்டு தொகுதிகளில் மொத்தம் 2,536 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. ஓட்டுச்சாவடிக்கு ஒருவர் வீதம், 2,536 ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் (பி.எல்.ஓ.,); பத்து பி.எல்.ஓ.,க்களுக்கு ஒருவர் வீதம் 254   மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சிறப்பு தீவிர திருத்தம் குறித்து அரசியல் கட்சியினருக்கு விளக்குவதற்கான கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது.டி.ஆர்.ஓ., கார்த்திகேயன், மாநகராட்சி கமிஷனர் அமித், ஆர்.டி.ஓ., சிவபிரகாஷ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) புஷ்பாதேவி மற்றும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர். பி.எல்.ஓ.க்கள் நியமனம்
கலெக்டர் மனிஷ் நாரணவரே தலைமை வகித்து பேசியதாவது: கடந்த 1951 முதல் 2004 வரை, மொத்தம் எட்டு முறை, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடைசியாக, கடந்த 2002 - 2004 காலகட்டத்தில், அதாவது 21 ஆண்டுகள் முன்பு, தீவிர திருத்தம் நடைபெற்றது. அதன்பின், நடப்பாண்டு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.  இறந்த வாக்காளர் பட்டியலில் தொடர்வது, தவறாக வெளிநாட்டவர் பெயர் சேர்க்கப்பட்டது, இரட்டைப்பதிவு வாக்காளர் ஆகியவற்றை களைவதற்கு, தீவிர திருத்தம் அவசியமாகிறது. ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கும் தலா ஒருவர் வீதம் பி.எல்.ஓ.க்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், வாக்காளர்களின் வீடு தேடிச் சென்று, தீவிர திருத்தத்துக்கான படிவத்தை பூர்த்தி செய்து பெறுவர். பட்டியலில் இடம்பெற்றுள்ள அனைத்து வாக்காளருக்கும் கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கப்படும். வாக்காளர் அல்லது அவர்களின் உறவினரின் பெயரை, 2002- 2004 ம் ஆண்டில் நடைபெற்ற சிறப்பு தீவிர திருத்த பட்டியலில் உள்ள பெயருடன் இணைத்து, சரிபார்க்க, பி.எல்.ஓ.,க்கள் உதவி செய்வர். வாக்காளருக்கு 2 நகல் படிவம்
ஒவ்வொரு வாக்காளருக்கும் இரண்டு நகல் படிவங்கள் வழங்கப்படும். ஒருபடிவத்தை பூர்த்தி செய்து, பி.எல்.ஓ.,விடம் கொடுக்கவேண்டும்; மற்றொரு நகலை, ஒப்புகைச்சீட்டாக வாக்காளரே வைத்துக்கொள்ளலாம். வாக்காளர்கள், தேர்தல் கமிஷன் குறிப்பிட்டுள்ள 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை, படிவத்துடன் இணைத்து வழங்கப்படும். ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களும், வாக்காளர்களும், முந்தைய சிறப்பு தீவிர திருத்த தரவுகளை, https://voters.gov.inஎன்கிற தேர்தல் கமிஷனின் தளத்திலிருந்து பெறலாம். கணக்கெடுப்பில் படிவங்கள் பெறப்பட்ட அனைத்து வாக்காளர்களின் பெயர்களும், வரைவு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும். சிறப்பு தீவிர திருத்த பட்டியலில் பெயர் பொருந்தாத மற்றும் இணைக்கப்படாத வாக்காளர்களுக்கு அறிவிப்பு வழங்குவது; தகுதி அடிப்படையில் இறுதி பட்டியலில் பெயர் சேர்ப்பது அல்லது நீக்கம் செய்வது போன்ற முடிவுகளை, வாக்காளர் பதிவு அலுவலர் , உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் மேற்கொள்வர். ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் ஒரு வாக்காளர் பதிவு அலுவலர் உள்ளனர். இவர்கள், வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிப்பு, வாக்காளர்களின் உரிமை கோரல் மற்றும் மறுப்புரைகளை பெற்று, முடிவெடுப்பர். தாலுகா அளவில், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் இருப்பர். வாக்காளர் பதிவு அலுவலரின் முடிவுக்கு எதிரான முதல் மேல்முறையீட்டை, மாவட்ட தேர்தல் அதிகாரி (கலெக்டர்) விசாரிப்பார். மாவட்ட தேர்தல் அதிகாரியின் முடிவுக்கு எதிரான இரண்டாம் கட்ட மேல்முறையீடுகளை, தலைமை தேர்தல் அதிகாரி விசாரிப்பார். இவ்வாறு, கலெக்டர் விளக்கம் அளித்தார்.
அ.தி.மு.க. - பா.ஜ. ஆதரவு
தி.மு.க. - காங். - கம்யூ. எதிர்ப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்துக்கு, பா.ஜ., - அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன; சிறப்பு தீவிர திருத்தம் திறம்பட மேற்கொள்ளப்பட வேண்டும் என, அக்கட்சிகள் சார்பில் பங்கேற்ற பிரதிநிதிகள் தெரிவித்தனர். தி.மு.க., - கம்யூ., - காங்கிரஸ் கட்சியினர், தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசினர்; தீவிர திருத்தத்தை திரும்பப்பெறவேண்டும் என வலியுறுத்தினர். அரசியல் கட்சியினருக்கு, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் என்னென்ன பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன; எந்தெந்த அதிகாரி என்னென்ன பணிகளை மேற்கொள்வார் என்பன உள்பட முழு விளக்கங்கள் அடங்கிய கையேடு வழங்கப்பட்டது.
வாக்காளர் வீடு தேடி வரும் படிவங்கள்
வரும் நவ. 3ம் தேதிக்குள் சிறப்பு தீவிர திருத்தத்துக்கான படிவங்கள் அச்சிடுதல், பி.எல்.ஓ.,க்கள் உள்பட தேர்தல் பிரிவினருக்கு பயிற்சி அளிக்கும் பணிகள் முடிவடையும். நவ. 4 முதல், டிச. 4ம் தேதி வரை, பி.எல்.ஓ.,க்கள், வாக்காளர் வீடு தேடிச்சென்று, தீவிர திருத்தத்துக்கான படிவங்களை வழங்குவர்; பூர்த்தி செய்த படிவங்களை, வாக்காளர்களிடமிருந்து பெறுவர். டிச. 9ம் தேதி, வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்படும். ஜன. 8ம் தேதி வரை, விடுபட்டவர்கள் பெயர் சேர்ப்பது, நீக்கம் செய்வது தொடர்பான நடவடிக்கைகளும்; ஜன. 31 ம் தேிி வரை, சரிபார்ப்பு மற்றும் விசாரணைகள் நடைபெறும். பிப். 7ம் தேதி, வாக்காளர் இறுதி பட்டியல் வெளியிடப்படும்.