உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / உரம் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கணும்! துாய்மையை பராமரிக்க வலியுறுத்தல்

உரம் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கணும்! துாய்மையை பராமரிக்க வலியுறுத்தல்

உடுமலை, ; கிராம ஊராட்சிகளில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை மேம்படுத்த, உரம் தயாரிப்பதில் இலக்கு நிர்ணயிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள கிராமங்களில், துாய்மையை மேற்கொள்ளும் வகையில், 'துாய்மை இந்தியா' திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இது தொடர்பாக மக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மாநில அரசுகளும் இது தொடர்பாக நடவடிக்கை எடுத்து வருகின்றன. அவ்வகையில், கிராமங்களின் துாய்மையை மேம்படுத்த, துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ் திடக்கழிவு மேலாண்மை செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், குப்பைக்கழிவுகளிலிருந்து உரம் தயாரித்து விளைநிலங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. உடுமலை ஒன்றியத்தில் மொத்தமாக, 38 ஊராட்சிகள் உள்ளன. இதில் பெரியகோட்டை மற்றும் சின்னவீரம்பட்டி ஊராட்சிகளில், கழிவுகளிலிருந்து உரம் தயாரிக்கும் பணிகள் முதற்கட்டமாக செயல்படுத்தப்பட்டன. தொடர்ந்து அனைத்து ஊராட்சிகளிலும், துாய்மைக்காவலர்கள் நியமிக்கப்பட்டு, மக்கும் மற்றும் மக்காத குப்பை சேகரிக்கும் பணிகள் தற்போது நடக்கிறது. ஆனால், இப்பணிகள் துவக்கத்தில் மட்டும் தான் தீவிரமாக செயல்படுத்தப்பட்டது. சேகரிக்கப்படும் குப்பைக்கழிவுகளை தரம் பிரித்து, மக்கும் கழிவுகளை உரக்குழிகளில் கொட்ட வேண்டும். மக்காத கழிவுகளை மறுசுழற்சிக்கு பயன்படுத்த வேண்டும். இவ்வாறு கழிவுகளை தரம் பிரிப்பதற்கும், உரம் தயாரிப்பதற்கும் ஊராட்சிகளில் உரக்குடில்களும் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த குடில்கள் எந்த பயன்பாடும் இல்லாமல், கால்நடைகளை கட்டுவதற்கான இடமாக மட்டுமே உள்ளது. உரம் தயாரிக்கும் பணிகள் முழுமையாக நடப்பதில்லை. பல ஊராட்சிகளில் நுாறு சதவீத துாய்மை பெயரளவில் மட்டுமே உள்ளது. இப்பிரச்னைக்கு தீர்வு காண, ஊராட்சிகளில் உரம் தயாரிப்பதை அரசு ஊக்கப்படுத்துவதுடன், இலக்கு நிர்ணயிக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். மகளிர் திட்ட அலுவலர்கள் கூறுகையில், 'கிராம ஊராட்சிகளில், முடிந்தவரை திடக்கழிவு மேலாண்மை திட்டத்துக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. பொதுமக்களுக்கும் கழிவுகளை தரம்பிரித்து கொட்டுவதற்கு, மகளிர் சுய உதவி குழுவினர் வாயிலாக அறிவுரை வழங்கப்படுகிறது' என்றனர். இத்திட்டத்தை முழுமையான செயல்படுத்தும் வகையில், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை