கழிவுநீர் தேக்கம் நோய் அபாயம்
பொங்கலுார்: கொடுவாய், சந்தைக்கடை ரோட்டில் இருந்து கோட்டைமேடு செல்லும் ரோடு அருகே, தெற்கு அவிநாசிபாளையம் ஊராட்சி சார்பில் சமுதாய உறிஞ்சு குழி அமைக்கப்பட்டுள்ளது. உறிஞ்சு குழியில் தேங்கும் கழிவு நீர் அனைத்தும் ரோட்டின் வழியாக வெளியேறுகிறது. ரோட்டின் ஒரு பகுதி குண்டடம் ஒன்றியம், எல்லப்பாளையம் புதுார் ஊராட்சிக்கும், மறுபகுதி பொங்கலுார் ஒன்றியம், தெற்கு அவிநாசிபாளையம் ஊராட்சிக்கும் சொந்தமானது. ரோட்டில் கழிவு நீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. குப்பைகள் குவிந்ததால் ரோடு நடைபாதை அளவுக்குச் சுருங்கி விட்டது. துர்நாற்றம் வீசுகிறது; தொற்றுநோய் பரவும் அபாயம் எழுந்துள்ளது. குண்டடம் மற்றும் பொங்கலுார் ஒன்றிய அதிகாரிகள் இணைந்து பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.