உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குடிமகன்களின் கூடாரமாக மாறிய கழிவுநீர் சுத்திகரிப்பு மையம்

குடிமகன்களின் கூடாரமாக மாறிய கழிவுநீர் சுத்திகரிப்பு மையம்

திருப்பூர்; ஆலாங்காடு பகுதியில் கட்டியுள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு மையம், பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. இதனால், அவ்வளாகம் சட்ட விரோத செயல்களின் புகலிடமாக மாறி விட்டது. திருப்பூர் மாநகராட்சியில், நொய்யலில் கலக்கும் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்து ஆற்றில் திறந்து விடும் வகையில் நொய்யலின் இரு புறங்களிலும் நான்கு இடங்களில் கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் கட்டி, ஓடைகள் மற்றும் கழிவுநீர்வடிகால்களில் வரும் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்யும் வகையில் திட்டமிடப்பட்டது. இதற்காக ஆலாங்காடு, சின்னான் நகர், மணியகாரம்பாளையம், காசிபாளையம் ஆகிய பகுதிகளில் சுத்திகரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஆலங்காடு மையம் கட்டுமானப் பணிகள் ஏறத்தாழ நிறைவடைந்துள்ளன. இருப்பினும் மையம் இன்னும் செயல்பாட்டுக்கு வராமல் உள்ளது. இந்த வளாகம் நொய்யல் கரையை ஒட்டி ஒதுக்குப்புறமாக அமைந்துள்ளது. இதுதவிர, கேட்பாரற்ற நிலையில் உள்ளதால், இவ்வளாகத்தில் மது அருந்துவது, கஞ்சா புகைப்பது போன்ற சட்ட விரோத சம்பவங்கள் தொடர்ந்து நடக்கிறது. ஆங்காங்கே சுற்றித்திரியும் போதை ஆசாமிகளும், சட்ட விரோத நபர்களும் இதை தங்களுக்கு வசதியாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளனர். வளாகம் முழுவதும் காலி மதுபாட்டில்கள், உணவு பார்சல்கள், மீத உணவுகள் இறைந்து கிடக்கின்றன. இரவு, பகல் என்றில்லாமல், எந்த நேரமும் இது போன்ற செயல்கள் அரங்கேறி வருகிறது. வளாகத்தை பாதுகாப்பு செய்து, உரிய கண்காணிப்பும் ஏற்படுத்த வேண்டும். பெரிய அளவிலான அசம்பாவிதம் ஏதும் ஏற்படாத வகையில்நடவடிக்கை எடுக்க வேண்டும். தாமதம் ஏன்? மையத்துக்கு கழிவு நீர் கொண்டு வரும் பிரதான வாய்க்கால் கட்டுமானப் பணி தாமதம் காரணமாக இதன் செயல்பாடுகள் துவங்குவதில் கால தாமதம் ஏற்பட்டது. மேலும், சுத்திகரிப்பு மையம் இயங்குவதற்கான மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒப்புதல் பெறுவதிலும் இழுபறியாக உள்ளது. இதற்கான நடவடிக்கைகள் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, இப்பணியை விரைந்து முடித்து மையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி