சவரத்தொழிலாளர்கள் நகராட்சிக்கு கோரிக்கை
உடுமலை; உடுமலை நகராட்சியில், பாரம்பரியமாக உள்ள சலுான் கடைகளுக்கு தொழில் வரி, உரிமம் பெறும் நடைமுறையில் விலக்கு அளிக்க வேண்டும், என மனு அளிக்கப்பட்டுள்ளது.உடுமலை நகராட்சி கமிஷனர் சரவணக்குமாரிடம், சவரத்தொழிலாளர் சங்கம் சார்பில், தலைவர் பூபதி, செயலாளர் ரத்தினகுமார், பொருளாளர் சிவபிரகாஷம் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கொடுத்த மனு: உடுமலை நகராட்சி பகுதியில், பல ஆண்டுகளாக, பாரம்பரியமாக சலுான் கடைகள் நடத்தி வருகிறோம். பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விதிக்கப்படுவது போல், சிறிய சலுான் கடைகளுக்கும் உரிமம் மற்றும் தொழில் வரி கட்ட வேண்டும், என நகராட்சி சார்பில் கூறப்படுகிறது.குலத்தொழிலாக ஒரு சமூகத்தால், இத்தொழில் செய்யப்பட்டு வரும் நிலையில், பெரிய கார்ப்பரேட் நிறுவன சலுான் கடைகள் அதிகரித்துள்ளதால், பாரம்பரியமாக இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் பாதித்து, வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.இந்நிலையில், உரிமம் மற்றும் தொழில் வரியால் பெரும் பாதிப்பு ஏற்படும். எனவே, பாரம்பரியமாக இத்தொழிலில் ஈடுபட்டுள்ள சமூகத்தினருக்கு, விலக்கு அளிக்க வேண்டும். இவ்வாறு, அம்மனுவில் தெரிவித்துள்ளனர்.