உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நீர் வளத்துறையில் அலுவலர் பற்றாக்குறை!

நீர் வளத்துறையில் அலுவலர் பற்றாக்குறை!

திருப்பூர், ; திருப்பூர் நகரம் மற்றும் அவிநாசி உள்ளிட்ட ஊரகப்பகுதிகளில் குளம், குட்டை, அணை உள்ளிட்ட நீர்நிலைகள் அதிகளவில் உள்ளன. அவற்றில் பல, பொதுப்பணித்துறையின் நீர்வளத்துறை பராமரிப்பு, கட்டுப்பாட்டில் உள்ளன. நொய்யல், நல்லாறு உள்ளிட்ட நீர்நிலைகளும், நீர்வளத்துறை பராமரிப்பில் உள்ளன.தமிழக அரசின் சார்பில், குளம், குட்டைகள் துார்வாரப்பட வேண்டும்; நீர்வளம் மேம்படுத்தப்பட வேண்டும் என்பது போன்ற அறிவிப்புகள் தொடர்ந்து வெளியிடப்பட்டாலும், திருப்பூர் மற்றும் ஊரக பகுதிகளை உள்ளடக்கிய திருப்பூர் பிரிவு நீர்வளத்துறையில், அலுவலர்கள் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தில் மட்டுமே உள்ளது. நீர்வளத்துறை உதவி பொறியாளர் மேற்பார்வையில், ஒரு பணி ஆய்வாளர், ஒரு லஸ்கர் எனப்படும் கரைக்காவலர் மட்டுமே உள்ளனர். கடந்த, 20 நாளுக்கு முன்பு தான், உதவியாளர் பணியிடம் நிரப்பப்பட்டது. அவரும், விரைவில் பணி ஓய்வு பெற உள்ளார்.விவசாயிகள் கூறியதாவது:திங்களன்று குறைகேட்பு கூட்டம், விவசாயிகள் குறைகேட்பு, மாசுக்கட்டுப்பாடு வாரியம் சார்பில் நடக்கும் கூட்டம், ஆய்வு கூட்டம், நல்லாறு, நொய்யலாறு உள்ளிட்ட ஆறு, ஓடையோரங்களில் ஆக்கிரமிப்பு அகற்றுவது, சாயக்கழிவுநீர் திறந்து விடும் தொழிற்சாலைகளை கண்காணிப்பது என, பல்வேறு பணிகளை நீர் வளத்துறையினர் மேற்கொள்ள வேண்டியுள்ளது. அலுவலர் எண்ணிக்கை குறைவு என்பதால், பணியாளர்களால் களப்பணியில் முழு கவனம் செலுத்த முடிவதில்லை.திருப்பூர் மாநகராட்சி மற்றும் நகரப்பகுதி துவங்கி அவிநாசி தாலுகா முழுதும், சோமனுார் - செஞ்சேரிபுத்துார் வரையும், மூளிக்குளம், வீரபாண்டி என, நீர்வளத்துறையின் எல்லை பரப்பு நீள்கிறது. பரந்து விரிந்த எல்லையில் களப்பணியாற்ற ஓரிரு பணியாளர்கள் மட்டுமே உள்ளனர் என்பது அதிர்ச்சியாக உள்ளது. நீர்நிலைகளை சரியான முறையில் பராமரிக்க, கூடுதலாக அலுவலர்களை நியமிக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !