உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  சித்த மருத்துவமனையை இடமாற்ற வேண்டாமே!

 சித்த மருத்துவமனையை இடமாற்ற வேண்டாமே!

திருப்பூர்: 'கை, கால் வலிக்கான எண்ணெய், சத்து பவுடர், களிம்புகளை வாங்க, வயதானவர்கள் பலர் பஸ் ஏறியும், நடந்து வந்தும் செல்கின்றனர். சித்த மருத்துவமனை ஓரமாக இடையூறு இன்றி உள்ளது. மாநகராட்சி அலுவலகத்துக்கு போதிய அளவில் இடமிருப்பதால், மாவட்ட சித்த மருத்துவமனையை இடமாற்ற கூடாது,' என்ற கோரிக்கை எழுந்துள்ளது. திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட் அருகே, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் அலுவலகம், மாவட்ட சித்த மருத்துவமனை, ஓமியோபதி, ஆயுர்வேதம் இணைந்த ஒருங்கிணைந்த மருத்துவமனை செயல்படுகிறது. பஸ் ஸ்டாண்ட் எதிரே, புதிய மாநகராட்சி அலுவலகம் கட்ட திட்டமிட்டுள்ள, மாநகராட்சி நிர்வாகம், மாவட்ட சித்த மருத்துவமனையை உடனடியாக காலி செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேற்கண்ட இடத்தில், 1986ம் ஆண்டு முதல் சித்த மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. திருப்பூர் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பலர் பஸ் ஸ்டாண்ட் வந்து இறங்கினால், நடந்தே, சித்த மருத்துவமனைக்கு வந்து விடலாம். அவ் வகையில், ஆயிரக்கணக்கானோர் இந்த மருத்துவமனையால் பலனடைந்து வருகின்றனர். சித்த மருத்துவ மனைக்கு வருவோரில், 70 சதவீதம் பேர், 60 வயதை கடந்தவர்கள். துாரமாக பயணிக்க முடியாது என்பதால், வீட்டில் இருந்து நடந்தே வந்து மருத்துவம் பார்த்து விட்டு செல்வோரும் உண்டு. யார் உதவியும் இல்லாமல் வந்து செல்வோர் பலர். இவ்வாறான நிலையில், சித்த மருத்துவமனையை வேறு இடத்துக்கு மாற்றினால், வயதானவர்கள் பலர் பெரும் சிரமத்துக்கு ஆளாவர்கள். மாநகராட்சி அலுவலகம் கட்ட உள்ள இடத்தில் இருந்து, 150மீ., தள்ளித்தான் சித்த மருத்துவமனை ஓரமாக உள்ளது. வயதானவர்கள், இணை நோய் காரணமாக தொடர் மருத்துவம் பார்ப்பவர்கள் சிரமங்களை கருத்தில் கொண்டு, சித்த மருத்துவமனை இடமாற்ற நடவடிக்கையை அதிகாரிகள் கைவிட வேண்டும். கோவை, திருப்பூர் மாவட்ட சித்த மருத்துவ இணை இயக்குனர் அலுவலகமும் இங்கு செயல்படுவதால், வேறு இடத்துக்கு மாற்றினால், நிர்வாக பணிகளை ஒருங்கிணைக்கவும் சிரமம் ஏற்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி