தரமான தளவாடப்பொருள் வழங்கணும்! பட்டு விவசாயிகள் வலியுறுத்தல்
உடுமலை; பட்டு வளர்ச்சித்துறை சார்பில், விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் தளவாட பொருட்கள் தரமானதாக இருக்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.பட்டு உற்பத்தி விவசாயிகள் நலச்சங்க தலைவர் செல்வராஜ், செயலாளர் பொன்னுசாமி, பொருளாளர் கனகராஜ் ஆகியோர், பட்டு வளர்ச்சித்துறை இயக்குனருக்கு அனுப்பியுள்ள மனு:தமிழகத்தில், 28 ஆயிரம் பேர் பட்டுக்கூடு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிலையில், 70 சதவீதம் பேர், சிறு, குறு விவசாயிகளாக உள்ளனர்.மிகவும் கவனம் செலுத்தி, கடும் உழைப்பின் வாயிலாக மட்டுமே பட்டுக்கூடு உற்பத்தி செய்ய முடியும் என்ற நிலையில், மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்கள் வாயிலாக உதவி வருகிறது.தற்போது, 2024-25ம் ஆண்டுக்கான திட்டங்களின் கீழ், விவசாயிகளுக்கு வழங்க, பாலிமர் மவுண்டேஜ் மஞ்சள் வலை, 350 கிராம் அளவில், 5 கிராம் கூடுதல், குறைவாக இருக்கலாம் என டெண்டர் கோரப்பட்டுள்ளது.இந்த தரத்தில் வலைகள் கொள்முதல் செய்தால், வலை தட்டியில் கூடு கட்ட புழுக்கள் வைக்கும் போது, வலை மீது புழுக்கள் ஏறியவுடன் வலை விரிந்து சென்று விடும்; நுால் வேஸ்ட் ஆகிவிடும்.சில புழுக்கள் கூடு கட்டாமல் நின்று விடும். பட்டுக்கூடு தரமும், உற்பத்தியும் குறைந்து விவசாயிகள் பாதிக்கும் நிலை உள்ளது. கடந்தாண்டு, இதே அளவில் வழங்கியதால், விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.எனவே, நடப்பாண்டு, 400 கிராமிற்கு மேல் உள்ள வலைகளை கொள்முதல் செய்து வழங்க வேண்டும்.அதே போல், பிளாஸ்டிக் கிருமி நீக்கி தொட்டி வழங்க திட்டமிடப்பட்டுள்ளாக தெரிகிறது. இதனை விவசாயிகள் பயன்படுத்த முடியாததோடு, விரைவில் உடைந்து விடும்.எனவே, இரும்பு பிரேம் மற்றும் சக்கரம் பொருத்திய வடிவில் கொடுத்தால் மட்டுமே, விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.எனவே, பட்டு வளர்ச்சித்துறையால், விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கும் தளவாட பொருட்கள், தரமுள்ளதாக வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு, அம்மனுவில் தெரிவித்துள்ளனர்.