உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இயற்கையின் மடியில் இத்தனை அழகா... விழிகள் விரிய வியந்த ஆர்வலர்கள்

இயற்கையின் மடியில் இத்தனை அழகா... விழிகள் விரிய வியந்த ஆர்வலர்கள்

சுற்றிலும் மலைகள், அரணாக அணிவகுத்து நிற்கும் மரங்கள், இடையிடையே ஓடும் தெளிந்த நீரோடை... உடல் சிலிர்க்க செய்யும் 'சில்'லென்ற காற்றில், வண்டுகளின் ரீங்காரம், பறவைகளின் கீச்சிடலை ரசித்தவாறு ஒரு பயணம்.'காடறிதல்' என்ற பெயரில், வனத்துறையுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பயணத்தில், சென்னையை சேர்ந்த கல்லுாரி மாணவ, மாணவியர், பேராசிரியர்கள், இயற்கை ஆர்வலர்கள் என, ஒரு சிறு கூட்டமே பயணிக்கிறது.'அடடா... இயற்கையின் மடியில் இத்தனை அழகா?' என்ற வியப்பு மேலிட பயணிக்கும் குழுவினரிடம், 'வழிந்தோடும் காட்டாற்று நீரை, கைகளில் அள்ளி பருகுங்கள்' என் அன்புக் கட்டளையிடுகிறார், பயணத்தை வழிநடத்தும், சுற்றுச்சூழல் எழுத்தாளர் கோவைசதாசிவம்.காயம்படாமல் ஓடி வருகிற காட்டாற்று நீரை அள்ளிப்பருகி, அதன் சுவையில் மெய் சிலிர்க்கும் சென்னை வாசிகளிடம், 'ஒவ்வொரு நகரிலும் ஒவ்வொரு ஆறு, நதிகள் ஓடுவது இயல்பு; ஆனால், எங்கும் இல்லாத அதிசயமாக சென்னையில் தான், கூவம், அடையாறு மற்றும் கொசஸ்தலம் என மூன்று ஆறுகள் ஓடுகின்றன. அந்த ஆறுகளில் வழிந்தோடும் நீரை இப்படி கைகளால் அள்ளிப்பருக முடியுமா?'' என கேள்வி எழுப்புகிறார் சதாசிவம்.திக்கித்து நிற்கும் சென்னை வாசிகள், 'வாய்ப்பே இல்லை? அந்த ஆறுகள் தான் சாக்கடையாக மாறிப் போய்விட்டதே?'' என்கின்றனர். ''சென்னையில் ஓடும் ஆறுகளில் வழிந்தோடி செல்லும் சாக்கடை நீரை மறுசுழற்சி செய்து, வர்த்தக ரீதியாக விற்பனை செய்யலாம்.கட்டுமான தொழில் நிரம்ப நடக்கும் சென்னையில், மறுசுழற்சி செய்யப்பட்ட நீரை கட்டுமானப்பணிக்கு பயன்படுத்தலாம். நீரை பயன்படுத்தி பல்வேறு உற்பத்தி பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களும் சுத்திகரிக்கப்பட்ட அந்த நீரை வாங்கி பயன்படுத்தலாம். அவ்வாறு செய்வதன் வாயிலாக, ஆறுகள் மாசுபடுவது தவிர்க்கப்படும்'' என்கிறார் சதாசிவம்.

1,500 வகையானஉயிரினங்கள்

இப்படியான ஒரு அறிவார்ந்த கற்றலுடன் 'காடறிதல்' பயணம் குறித்து, கோவை சதாசிவம் நம்மிடம் பகிர்ந்தது...பள்ளி கல்லுாரி, மாணவ, மாணவியர், இயற்கை செயற்பாட் டாளர்கள், குடும்ப பெண்களை 'காடறிதல்' பயணத்துக்கு அழைத்து செல்கிறோம். குடும்ப பெண்கள் தான், சுற்றுச்சூழலை அதிகம் தெரிந்துக் கொள்ள வேண்டும்.நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளும் காடுகளில் இருந்து தான் கிடைக்கிறது. காட்டில் யானை, புலியை பார்க்க முடியுமா என்ற எதிர்பார்ப்புடன் வருவோருக்கு, சிறிய பூஞ்சானை காண்பிக்கிறோம்.யானையின் சாணத்தில் இருந்து தான், இந்த பூஞ்சான் முளைக்கிறது எனக்கூறி, அதனால் பல்லுயிர் பெருக்கத்துக்கு ஏற்படும் பயன்களை சொல்கிறோம். ஒரு வனத்தில் பூஞ்சையும் வேண்டும்; புலியும் வேண்டும் என்பதை உணர்த்துகிறோம்.ஒரு எக்டர் பரப்பிலான நிலம் அழிக்கப்பட்டு, அங்கு கட்டடம் அல்லது மாற்று பயன்பாட்டுக்குரிய இடமாக மாற்றப்படும் போது, அங்கிருந்த தாவரங்களை நம்பி வாழ்ந்த புழு, பூச்சிகள் அழியும்; அவற்றை நம்பி வாழ்ந்த பறவைகள், தங்கள் வாழ்விடங்களை இழக்கும். ஏராளமான பதுங்குயிர்கள் தங்கள் வாழ்விடங்களை தொலைக்கும்.இவ்வாறு, ஒரு எக்டர் நிலம் அழிக்கப்படும் போது, 1,500 வகையான உயிரினங்கள் அதன் வாழ்விடத்தை இழக்கிறது என்ற உண்மையை விளக்குகிறோம்.பாண்டிச்சேரி மட்டுமின்றி சென்னை, கடலுார், விழுப்புரம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, மதுரை, திண்டுக்கல் என பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள், பெண்கள் காடறிந்து, மகிழ்கின்றனர்.இவ்வாறு, அவர் கூறினார்.தாவரங்களை நம்பி வாழ்ந்த புழு,பூச்சிகள் அழியும்; அவற்றை நம்பி வாழ்ந்தபறவைகள், தங்கள் வாழ்விடங்களை இழக்கும்.ஏராளமான பதுங்குயிர்கள் தங்கள்வாழ்விடங்களை தொலைக்கும்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ