உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அரசு குளத்தில் மண் திருட்டு; நாளை விவசாயிகள் போராட்டம்

அரசு குளத்தில் மண் திருட்டு; நாளை விவசாயிகள் போராட்டம்

உடுமலை; கனிம வளக்கடத்தலை கண்டு கொள்ளாத அதிகாரிகளை கண்டித்து, மடத்துக்குளம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். மடத்துக்குளம் தாலுகா, குமரலிங்கம் அருகே, 118 ஏக்கர் பரப்பளவில், நீர் வளத்துறைக்கு சொந்தமான ராம குளம் உள்ளது. இக்குளத்தில், சட்ட விரோதமாக எந்த விதமான அனுமதியும் பெறாமல், குளத்தை சீரழிக்கும் வகையில் மண் கடத்தப்பட்டு வருகிறது. இது குறித்து விவசாயிகள், பொதுமக்கள் தரப்பில் புகார் கொடுத்தும், வருவாய்த்துறை, கனிம வளத்துறை, நீர்வளத்துறை, போலீசார் என அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. நேற்று முன்தினம், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், மண் திருடப்பட்ட குளத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகள் போராட்டத்தையடுத்து, கனிம வளக்கொள்ளை கும்பல் லாரிகளை வேகமாக எடுத்துச்சென்றனர். ஆனால், பெரிய அகழ்வு இயந்திரத்தை விவசாயிகள் சிறைபிடித்தனர். விவசாயிகள் தரப்பில், மண் கடத்திய வாகனங்களை பறிமுதல் செய்யவும், மண் திருட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என வலியுறுத்தப்பட்டது. ஆனால், அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. கனிம வளத்திருட்டை விவசாயிகள் பிடித்துக்கொடுத்தாலும், நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தயக்கம் காட்டி வருவதும், அதிகாரிகளும் கடத்தலுக்கு துணையாக இருப்பதை கண்டித்து, நாளை (3ம் தேதி) மடத்துக்குளம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு, தொடர் காத்திருப்பு போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட உள்ளதாக, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை