மருமகன் குத்திக்கொலை: மாமனாருக்கு ஆயுள்
தாராபுரம்,மருமகனை கத்தரிக்கோலால் குத்தி கொலை செய்த மாமனாருக்கு, தாராபுரம் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவிலை சேர்ந்தவர் சூர்யா, 50. இங்குள்ள பஸ் ஸ்டாண்டில் பூக்கடை நடத்தி வந்தார். இவரது மகள் சினேகாவுக்கும், மோளக்கவுண்டன் பாளையத்தை சேர்ந்த நாகராஜ் மகன் ராஜசேகர், 31, என்பவருக்கும் திருமணம் நடந்தது. ராஜசேகர், ஏற்கனவே திருமணமாகி, மனைவியை பிரிந்தவர் என்பதால், இத்திருமணத்தில் சூர்யாவுக்கு முழு சம்மதம் இல்லாமல் இருந்தது.இந்நிலையில் சூர்யாவின் பூக்கடையில், ராஜசேகரும் சேர்ந்து பணிபுரிந்தார். ராஜசேகர், அவ்வப்போது மது குடித்துவிட்டு வந்து, தகராறில் ஈடுபட்டுள்ளார். 2020 பிப்., 16ல், பூக்கடை முன் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, என் மகளை ஏமாற்றி திருமணம் செய்தது போதாது என்று, கடையிலும் பிரச்னை செய்கிறாயா எனக் கேட்டு, இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தரிக்கோலால், ராஜசேகரின் நெற்றியில், சூர்யா குத்தினார். இதில், படுகாயமடைந்த ராஜசேகர் இறந்தார்.இந்த வழக்கு தாராபுரம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று மாவட்ட அமர்வு நீதிபதி சரவணன் வழக்கை விசாரித்து, சூர்யாவுக்கு ஆயுள் தண்டனை, 5,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். அரசு தரப்பு வழக்கறிஞர் மணிவண்ணன் ஆஜரானார்.