சொல்வது தெளிந்து சொல்
திருப்பூர்; திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நேற்று நடந்தது. மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், பிரச்னைகள், குறைகளை மனுவாக எழுதி, கலெக்டர் கிறிஸ்துராஜிடம் வழங்கினர். அந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக துறை சார்ந்த அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. நேற்றைய முகாமில், பொதுமக்களிடமிருந்து மொத்தம் 484 மனுக்கள் பெறப்பட்டன.பல்லடம், செம்மிபாளையத்தை சேர்த்த நுாற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டுவந்து, எவ்வித பாகுபாடுமின்றி பயனாளிகளை தேர்வு செய்து, இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி மனு அளித்தனர்.பல்லடம் வட்டார சமூக ஆர்வலர் கூட்டமைப்பு தலைவர் அண்ணாதுரை அளித்த மனு:சேமலைகவுண்டம்பாளையத்தில் விவசாய குடும்பத்தினர் மூன்றுபேர் படுகொலை சம்பவத்தில், கொலையாளிகளை பிடிக்கும் நடவடிக்கைகளை போலீசார் தீவிரப்படுத்தவேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கி, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவேண்டும்.பல்லடம் தாலுகாவில், ஆறுமுத்தாம்பாளையம், கரைப்புதுார், கணபதிபாளையம் ஊராட்சிகளில் லட்சக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர். இதன்மத்தியில், அருள்புரத்தில் புதிய போலீஸ் ஸ்டேஷன் அமைக்கவேண்டும். மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவேண்டும்.