குவிந்த காய்கறிகள்
திருப்பூர்: தீபாவளிக்கு பின் மீண்டும் இயல்பு நிலை திரும்பியதால், திருப்பூர், தென்னம்பாளையம் காய்கறி மார்க்கெட்டுக்கு நேற்று ஒரே நாளில், 230 டன் காய்கறி விற்பனைக்கு வந்தது. கோயம்பேடு, ஒட்டன்சத்திரம், ஒசூருக்கு அடுத்து மாநிலத்தில் மிகப்பெரிய காய்கறி மார்க்கெட்டாக திருப்பூர், தென்னம்பாளையம் மார்க்கெட் விளங்குகிறது. உள்ளூர் மட்டுமின்றி, ஈரோடு மாவட்டம், தாளவாடி, அந்தியூர், சத்தி மற்றும் சேலம், ஒட்டன்சத்திரம், மைசூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து காய்கறிகள், பழங்கள், கீரைகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. கோவை, மேட்டுப்பாளையம் மற்றும் நீலகிரியில் இருந்து கேரட், உருளைக்கிழங்கு; மஹா ராஷ்டிரா, நாக்பூர், உ.பி., ம.பி.,யில் இருந்து பெரிய வெங்காயம் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. தீபாவளியையொட்டி தொடர் விடுமுறை என்பதால், கடந்த, 16, 17ம் தேதி காய்கறி வரத்து, 180 டன்னாக குறைந்தது. திருப்பூரில் வசிக்கும் தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் சொந்த மாவட்டங்களுக்கு படையெடுத்தனர். தீபாவளி நாளில் மார்க்கெட்டுக்கு, 140 டன் காய்கறி மட்டுமே வந்தது. பண்டிகை முடிந்து பள்ளி, கல்லுாரிகள் விடுமுறை, பனியன் நிறுவனங்கள் இயக்கம் முழுமையாக துவங்காததால், 22ம் தேதி வரை வரத்து கடுமையாக சரிந்தது. நேற்று வெளிமாநில வியாபாரிகள், விவசாயிகள் பலர் மார்க்கெட்டுக்கு வந்தனர். வரத்து, 230 டன்னாக உயர்ந்தது. கண்ணுக்கு எட்டிய துாரம் வரை காய்கறிகள் மூட்டை, மூட்டையாக காணப்பட்டன. மொத்தம் 7,000 வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் மார்க்கெட்டுக்கு வந்திருந்தனர்.வெளிமாநில வரத்து அதிகரிப்பால், பெரிய வெங்காயம், ஏழு கிலோ, 100 ரூபாய், தக்காளி நான்கு கிலோ, 100 ரூபாய்க்கு விற்றது.