ஊராட்சியில் 2 இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
திருப்பூர் : மக்கள் தொகை அதிகம் உள்ள மங்கலம் ஊராட்சியில், உங்களுடன் ஸ்டாலின் முகாம், இரண்டு நாட்கள் நடக்க உள்ளது. திருப்பூர் ஒன்றியம், மங்கலம் ஊராட்சி, மாநகராட்சியை ஒட்டி அமைந்துள்ளது; மக்கள் தொகை அதிகம் என்பதால், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமை இரண்டு இடங்களில் நடத்த வேண்டுமென, மக்கள் எதிர்பார்த்தனர். அக்ரஹாரப்புத்துார் சமுதாயக்கூடத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில், மங்கலம் பகுதியை சேர்ந்த தி.மு.க., வினர், பொதுமக்கள் வசதிக்காக, பல்லடம் ரோட்டில் உள்ள திருமண மண்டபத்தில் நடத்த வேண்டுமென வலியுறுத்தினர். ஊராட்சியில், அமைச்சர் அணி, மாவட்ட செயலாளர் அணி என, இருவேறு அணிகளாக, ஆளும்கட்சியினர் செயல்பட்டு வருகின்றனர். மங்கலத்தில் நடத்தக்கூடாதென, மற்றொரு தரப்பு ஆட்சேபனை தெரிவித்தது. இப்பிரச்னை எதிரொலியாக, இரண்டு இடங்களில் முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பி.டி.ஓ., வேலுசாமியிடம் கேட்டபோது, ''உங்களுடன் ஸ்டாலின் முகாம், 28ம் தேதி அக்ரஹாரப்புத்துார் சமுதாயக்கூடத்தில் நடக்கும்; செப்., 2ம் தேதி, மங்கலம் பல்லடம் ரோட்டில் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள மண்டபத்தில் நடக்கும். அதிக மக்கள் கொண்ட ஊராட்சிகளில், இரண்டு முகாம்கள் நடத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது,'' என்றார்.