உங்களுடன் ஸ்டாலின் முகாம்; அவிநாசியில் மனுக்கள் குவிந்தன
அவிநாசி; அவிநாசி, வடக்கு ரத வீதி, தேவேந்திர குல வேளாளர் திருமண மண்டபத்தில் அவிநாசி நகராட்சிக்குட்பட்ட 13, 14 மற்றும் 15வது வார்டுகளுக்கான 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நகராட்சி தலைவர் தனலட்சுமி தலைமையில் நடந்தது. கமிஷனர் வெங்கடேஸ்வரன், தாசில்தார் சந்திரசேகர் முன்னிலை வகித்தனர். முகாமில், 15 அரசு சார்பு துறைகளின் கீழ் 46 சேவைகள் வழங்கப்பட்டது.மகளிர் உரிமை திட்டத்தில் தகுதி வாய்ந்த விடுபட்ட மகளிர் அதிக அளவில் மனு அளிக்க வந்திருந்தனர். சாதி சான்று, பட்டா மாறுதல், பென்சன், மருத்துவ காப்பீடு அட்டை, ஆதார் அட்டையில் திருத்தங்கள், குடும்ப அட்டையில் திருத்தம் என பல்வேறு கோரிக்கைகளுக்கு பொதுமக்கள் மனு அளித்தனர். மொத்தம், 726 மனுக்கள் பெறப்பட்டன.நேற்று நடந்த முகாமை திருப்பூர் மேயர் தினேஷ் குமார் துவக்கி வைத்து, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 5 பேருக்கு உடனடியாக சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணம் பெயர் மாற்றம் செய்து, உரிய அத்தாட்சி ரசீது வழங்கினார்.தி.மு.க., தலைமை பொதுக்குழு உறுப்பினர் சரவணன்நம்பி, ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாஷ், நகர செயலாளர் வசந்தகுமார், கவுன்சிலர்கள் பர்கத்துல்லா, கார்த்திகேயன், திருமுருகநாதன், கோபால கிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.