துாய்மைப் பணியாளர் 3வது நாளாக ஸ்டிரைக்
திருப்பூர்; திருப்பூர் மாநகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்த துாய்மைப் பணியாளர்கள் நேற்று மூன்றாவது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நிறுவன அலுவலர்கள் பேச்சு நடத்தி, போராட்டத்தை தடுத்தனர்.திருப்பூர் மாநகராட்சி பகுதியில் தனியார் நிறுவனம் மூலம் துாய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் 1500க்கும் மேற்பட்ட துாய்மைப் பணியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.இவர்களில் உள்ளூர் பகுதியினர், ஆந்திரா மற்றும் சில வட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். இத்தொழிலாளர்கள் மாவட்ட நிர்வாகம் நிர்ணயித்த தினக்கூலியை வழங்க வேண்டும் என நீண்ட காலமாக கோரி வருகின்றனர். இந்நிலையில் 'நடப்பு மாத சம்பளத்தில் பலருக்கும் அதிகளவில் பணம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. அதை திரும்ப வழங்க வேண்டும். அரசு நிர்ணயித்த தினக்கூலி வழங்க வேண்டும்' எனக் கேட்டு கடந்த மூன்று நாட்களாக இவர்கள் ேவலை நிறுத்தம் செய்து வருகின்றனர். நேற்று காலை, 6:00 மணிக்கு வழக்கமாக பணிக்குச் செல்லும் தொழிலாளர்கள் வேலைக்குச் செல்லாமல் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர், இதனால், குப்பை அகற்றும் பணியில் தேக்கம் நிலவியது.இதையடுத்து தனியார் நிறுவன அலுவலர்கள், துாய்மைப் பணியாளர்கள் தங்கியுள்ள குடியிருப்பு பகுதிகளுக்குச் சென்றுபேச்சு நடத்தினர். தற்போது வழங்கப்படும் சம்பளம் அதிகரித்து வழங்க உறுதி அளிக்கப்பட்டது.அதன் பின் பெரும்பாலான பணியாளர்கள் காலை 10:00 மணிக்கு மேல் வேலைக்கு புறப்பட்டுச் சென்றனர்.