அலகுமலையில் போராட்டம்; நிலம் ஏல உத்தரவு ரத்தானது!
பொங்கலுார் : திருப்பூர் மாவட்டம், பொங்கலுார் ஒன்றியம், அலகுமலை ஊராட்சியில், 1,600 ஏக்கர் நிலத்தை அரசு ஜீரோ மதிப்பு செய்து பத்திரப்பதிவை தடுப்பதாகவும், 16 ஏக்கர் நிலத்தை ஹிந்து சமய அறநிலைத்துறை எடுத்துக் கொண்டு, ஏலம் விடுவதாக அறிவித்தது. இதனை கண்டித்தும், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனத் தலைவர் ஈசன் முருகசாமி தலைமையில், விவசாயிகள் அலகுமலை அடிவாரத்தில் நேற்று காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.விவசாயிகளிடம் போலீசார், அறநிலையத்துறையினர் பேச்சு நடத்தினர். இருப்பினும், ஏலத்தை ரத்து செய்தால் மட்டுமே கலைந்து செல்வோம் என விவசாயிகள் திட்டவட்டமாக அறிவித்தனர். இவ்வாறு, போராட்டம் தீவிரமடைந்ததால், ஏல அறிவிப்பை ரத்து செய்வதாக, அறநிலையத்துறையினர் அறிவித்தனர். அதனை தொடர்ந்து, திருப்பூர் தெற்கு தாசில்தார் மோகன் தலைமையில் பேச்சு நடத்தி தீர்வு காணலாம் என்று விவசாயிகளிடம் கூறியதால், விவசாயிகள் கலைந்து சென்றனர்.இதுகுறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனத் தலைவர் முருகசாமி கூறியதாவது:இனாம் நிலங்கள் வக்பு வாரியத்துக்கோ, ஹிந்து சமய அறநிலையத்துறைக்கோ சொந்தமானது அல்ல. எல்லா மாநிலங்களிலும் இனாம் நிலம் இருக்கிறது. எல்லா மாநிலங்களிலும் பட்டா கொடுக்கப்பட்டுள்ளது. 1,600 ஏக்கர் நிலம் அலகுமலையில் மட்டுமே 'ஜீரோ வேல்யூ' செய்துள்ளனர்.தமிழகத்தில் மட்டும்தான் கோவில் நிலம், வக்பு வாரிய நிலம் என அவற்றை பறிக்கும் வேலை நடக்கிறது. எங்களிடம் பத்திரம், அனுபவ பாத்தியம் உள்ளது. தமிழக அரசு, 12 லட்சம் ஏக்கரை வக்பு வாரியமும், ஹிந்து அறநிலைத்துறையும் உரிமை கொண்டாடுவதை சட்டத்திருத்தம் செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நில உரிமையை உறுதி செய்து பட்டா வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.