மாணவருக்கு காய்ச்சல் பாதிப்பு; பெற்றோர்களே... கவனம்
திருப்பூர்; திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, காங்கயம் தலைமை அரசு மருத்துவமனை, மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு காய்ச்சல், சளி, இருமல், தொடர் உடல் சோர்வு பாதிப்புகளுடன் பலர் வருகின்றனர். சாதாரண காய்ச்சலாக இருந்த போதும், மருத்துவமனை நாடி வருவோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதால், கவனமுடன் இருக்க பொது சுகாதாரத்துறை அறிவுரை வழங்கியுள்ளது.மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:வெப்ப நிலை அதிகரிப்பு திடீர் வானிலை மாற்றத்தால் சீதோஷ்ண நிலை மாறியுள்ளது. குளிர்காற்று, துாறல் மழையால், தட்டவெப்ப நிலை மாறி, காய்ச்சல் பாதிப்பு மெல்ல அதிகரித்து வருகிறது. எனவே, மாணவர்களின் உடல்நிலை விஷயத்தில் கவனமுடன் இருக்க வேண்டும். உடல்சோர்வு ஏற்பட்டால், கண்காணிக்க வேண்டும்.நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள மாணவர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு எளிதில் ஏற்பட வாய்ப்புள்ளது. ஒருவருக்கு தொடர் காய்ச்சல் பாதிப்பு தெரிந்தால், வீட்டில் ஓய்வெடுத்து குணமான பின் பள்ளிக்கு வரும்படி அறிவுரை வழங்க வேண்டும்.மாணவரின் உடல்நிலை குறித்து பெற்றோர் கண்காணித்து பின்னரே பள்ளிக்கு அனுப்ப வேண்டும். ஏதேனும் ஒரு பகுதியில் காய்ச்சல் பாதிப்பு, பத்துக்கும் மேற்பட்டோர் தொடர்ந்தால், அதிகரித்தால், சுகாதாரத்துறைக்கு தகவல் அளிக்க வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.