குறுமைய போட்டிகளில் மாணவர்கள் விறுவிறு
திருப்பூர்; குறுமைய விளையாட்டு போட்டியில், மாணவ, மாணவியர் திறமையை வெளிக்காட்டி வருகின்றனர். திருப்பூர் வித்யா விகாசினி பள்ளியில் நடந்த தெற்கு குறுமைய மாணவியர் பீச் வாலிபால் போட்டியில், 14, 17 மற்றும், 19 என மூன்று பிரிவுகளிலும், வித்யா விகாசினி பள்ளி வெற்றி பெற்றது. 14 வயது பிரிவில் வேலவன் பள்ளி அணி; 17 வயது பிரிவில், கிட்ஸ் கிளப் பள்ளி அணி; 19 வயது பிரிவில், பிரன்ட்லைன் பள்ளி அணிகள் இரண்டாமிடம் பெற்றன.மாணவியர் பிரிவில், 14, 17 மற்றும், 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில், வித்யா விகாசினி பள்ளி அணி வெற்றி பெற்றது. 14 மற்றும் 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில், பிரன்ட்லைன் பள்ளி அணி இரண்டாமிடம்; 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில், வேலவன் பள்ளி அணி இரண்டாமிடம் பெற்றது. கால்பந்து முதலிபாளையம், நிப்ட் - டீ கல்லுாரியில் நடந்த மாணவியர் பிரிவு கால்பந்து போட்டி நடந்தது. கல்லுாரி முதல்வர் கோபாலகிருஷ்ணன், நிர்வாக இயக்குனர் செந்தில்குமார் தலைமை வகித்தனர். பெரியபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி உதவி தலைமையாசிரியர் கமலா ஜூலி, போட்டிகளை துவக்கி வைத்தார்.இதில், 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் 6 அணிகள் பங்கேற்றன. போட்டியில், பிளாட்டோஸ் அகாடமி அணி 1 - 0 என்ற கோல் கணக்கில், காந்தி வித்யாலயா பள்ளி அணியை வென்றது. 17 வயதுக்குட்பட்ட மாணவியர் பிரிவில், காந்தி வித்யாலயா பள்ளி அணி, சென்சுரி பள்ளி அணியை, 2 - 0 என்ற கோல் கணக்கில் வென்றது. 19 வயது பிரிவில் விவேகானந்தா வித்யாலயா பள்ளி, 6 - 0 என்ற கோல் கணக்கில் வென்றது. கிட்ஸ் கிளப் பள்ளி இரண்டாமிடம் பெற்றது. கோ கோ போட்டி மாணவியர், 17 வயதுக்குட்பட்ட கோ கோ பிரிவில், 7 அணிகள் பங்கேற்றன. முதல் அரையிறுதியில், விஜயாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி அணி, 6 - 1 என்ற புள்ளி கணக்கில் பெரியபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி அணியை வென்றது. இரண்டாவது அரையிறுதியில், பிரன்ட்லைன் பள்ளி மற்றும் பழனியம்மாள் மாநகராட்சி பள்ளி அணிகள் மோதின. இதில், 10 - 1 என்ற புள்ளி கணக்கில் பிரன்ட்லைன் பள்ளி அணி வென்றது. மேலும், 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில், 5 அணிகள் பங்கேற்றன. முதல் அரையிறுதியில், பிரன்ட்லைன் மற்றும் பழனியம்மாள் அணிகள் தகுதி பெற்றுள்ளன. இரண்டாவது அரையிறுதிக்கு பாலபவன் மற்றும் விவேகானந்தா பள்ளி அணிகள் தகுதி பெற்றுள்ளன. கபடி போட்டி திருப்பூர் வடக்கு குறுமைய கபடி போட்டி, திருமுருகன் மெட்ரிக் பள்ளியில் நடந்தது. 17 வயது பிரிவில், 15 அணிகளும், 14 வயது பிரிவில், 12 அணிகளும் பங்கேற்றன. 19 வயது பிரிவு இறுதிப்போட்டியில், வி.கே., அய்யன்காளிபாளையம் பள்ளி அணி, பிஷப் உபகாரசாமி பள்ளி அணிகள் மோதின. இதில், 28 - 17 என்ற புள்ளி கணக்கில், வி.கே., அரசுப்பள்ளி வெற்றி பெற்றது. 14 மற்றும், 17 வயது போட்டியில், அதிக அணிகள் பங்கேற்றதால், அரையிறுதி போட்டி, வேறொரு நாளில் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டது.