நடுரோட்டில் அரசு பஸ் திடீர் பழுது நாற்புறமும் ஸ்தம்பித்த போக்குவரத்து
பல்லடம்: நடுரோட்டில் பழுதாகி நின்ற அரசு பஸ்சால், பல்லடம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தீபாவளியை முன்னிட்டு, கடந்த இரண்டு நாட்களாக, பல்லடம் வழியே செல்லும் நெடுஞ்சாலையில், வாகனங்கள் அணிவகுத்து செல்கின்றன. திருப்பூரில் இருந்து பல்லடம் நோக்கி வந்த அரசு பஸ்,, நேற்று மதியம், பஸ் ஸ்டாண்ட் அருகே நடுரோட்டில் பழுதாகி நின்றது. பயணிகள் இறங்கி சென்ற நிலையில், பஸ்சை இயக்குவதற்காக டிரைவர் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளும் தோல்வியடைந்தன. போக்குவரத்து பணிமனையில் இருந்து ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு, பழுது பார்க்கும் பணி அங்கேயே துவங்கியது. பஸ் ஸ்டாண்ட் நுழைவுப் பகுதியில், நடுரோட்டில் பஸ் நின்றதால், பஸ்கள் உள்ளே செல்வதில் தடங்கல் ஏற்பட்டது. பஸ்கள் வெளியே செல்லும் வழியாகவே உள்ளே அனுமதிக்கப்பட்டன. கோவை- மற்றும் திருச்சி நோக்கிச் செல்லும் வாகனங்களுக்கும் இடையூறு ஏற்பட்டதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பஸ் பழுதாகி நின்றது பஸ் ஸ்டாண்டுக்கு முன் பகுதி என்பதால், தேசிய நெடுஞ்சாலை மட்டுமின்றி, அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து ஸ்தம்பித்தது. தீபாவளி பண்டிகை காரணமாக, வானங்கள் அணிவகுத்துவர, பழுதாகி நின்ற பஸ்சை அப்புறப்படுத்த முடியாமலும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்த முடியாமலும், போலீசார் திணறினர். --- பல்லடம் பஸ் ஸ்டாண்ட் முன், தேசிய நெடுஞ்சாலையில் பழுதாகி நின்ற அரசு பஸ். பல்லடத்தில் 'இரட்டை தலைவலி' நேற்று முன்தினம், பல்லடத்தில் தேசிய நெடுஞ்சாலையில், குப்பைகளுடன் வந்த கன்டெய்னர் லாரி நடுரோட்டில் கவிழ்ந்ததால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதேபோல், நேற்றும் பஸ் பழுதாகி நின்றதால், மீண்டும் அதே போன்றதொரு சூழல் உருவானது. பண்டிகை வந்தாலே பல்லடத்துக்கு இரட்டைத் தலைவலிதான்.