திடீர் மழை; திணறியது மாநகரம்
திருப்பூர்; திருப்பூரில் நேற்று மாலை பரவலாக மழை பெய்து, குளிர்வித்தது. பள்ளி மாணவ, மாணவியர் நனைந்தபடியே வீடு திரும்பினர். பிரதான சாலைகளில் மழைநீர் தேங்கி போக்குவரத்து ஸ்தம்பித்ததால் வாகன ஓட்டிகள் திக்குமுக்காடினர். தென்மேற்கு பருவம் முடிந்து, வடகிழக்கு பருவம் துவங்கியுள்ளது. சமீப காலமாக, வடகிழக்கு பருவமழை, சராசரி அளவைவிட கூடுதலாக பெய்து, திருப்பூரை வறட்சியிலிருந்து மீட்கிறது. தென்மேற்கு பருவமழை நிலத்தடிநீர் செறிவூட்டலுக்கும்; வடகிழக்கு பருவமழை, மானாவாரி பயிர் சாகுபடிக்கும் கைகொடுக்கின்றன. திருப்பூரில் சில நாட்களாகவே கோடை போன்று வெயில் சுட்டெரித்து வந்தது. நேற்றும், மதியம் வரை, வெயில் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. மாலை, 4:10 மணியளவில் திடீரென மழை பெய்யத்துவங்கியது. திருப்பூர் - தாராபுரம் ரோடு, பல்லடம் ரோடு, ஊத்துக்குளி ரோடு, அவிநாசி ரோடு என, மாநகர பகுதி முழுவதும் பரவலாக மழை பெய்தது. சில நிமிட இடைவெளியில், விட்டு விட்டு ஒரு மணி நேரம் வரை மழை பெய்தது. பலத்த மழையாக பெய்ததால், பள்ளி மாணவ, மாணவியர் மழையில் நனைந்தபடியே வீடு திரும்பினர். வாகன ஓட்டிகள், டூவீலர்களை ரோட்டோரம் ஓரம்கட்டி நிறுத்திவிட்டு, கடைகளில் தஞ்சமடைந்தனர்; மழை நின்றபின் புறப்பட்டுச்சென்றனர். சாலைகளில் மழைநீர் தேங்கியதால் பிரதான சாலைகளில் போக்குவரத்து நீண்ட நேரம் ஸ்தம்பித்தது. இரவிலும் மழை நீடித்தது. வடகிழக்கு பருவமழையின் வருகை, விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 'அடுத்தடுத்த நாட்களில் சிறப்பாக மழை பெய்யும்; அணைகள் உள்பட நீர் நிலைகள் நிரம்பும்; பாசனம் செழிக்கும்' என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. கால்நடை தீவனமாக பயன்படுத்தப்படும் சோளப்பயிர், இந்த பருவத்தில்தான் சாகுபடி செய்யப்படுகிறது. எந்த மழை பெய்தாலும், வடகிழக்குப்பருவம் கைகொடுக்கும் என்ற நம்பிக்கை, விவசாயிகளிடம் உள்ளது.