உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தரமற்ற முட்டைகள் வினியோகம் பட்டு வளர்ச்சி அலுவலகம் முற்றுகை

தரமற்ற முட்டைகள் வினியோகம் பட்டு வளர்ச்சி அலுவலகம் முற்றுகை

உடுமலை:தரமற்ற பட்டு முட்டைகளை வினியோகம் செய்ததால், புழு வளர்ப்பு மனைகளில் திடீரென பட்டுப்புழுக்கள் கூடு கட்டாமல் இறந்ததால், அதிர்ச்சியடைந்த விவசாயிகள் மத்திய பட்டு வளர்ச்சித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.தமிழகத்தில், 26,000க்கும் மேற்பட்ட விவசாயிகள், பட்டுக்கூடு உற்பத்தித் தொழிலில் உள்ளனர். இதில், உடுமலை, பழனி, பொள்ளாச்சி, பல்லடம் உள்ளிட்ட பகுதிகளில் வெண் பட்டுக்கூடு உற்பத்தி உள்ளது. பட்டுப்புழுக்களுக்கு உணவான மல்பெரி சாகுபடி செய்து, புழு வளர்ப்பு மனைகளில், பட்டுக்கூடு உற்பத்தி செய்யப்படுகிறது.மத்திய, மாநில அரசுகளின் மையங்களிலிருந்து, பட்டு முட்டைகள் கொள்முதல் செய்து, ஏழு நாட்கள் இளம்புழு வளர்ப்பு மனைகளில் வளர்க்கப்பட்டு, விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. தரமற்ற பட்டு முட்டை வினியோகம், இளம்புழு வளர்ப்பு மனைகளில் கண்காணிப்பு இல்லை என, விவசாயிகள் தரப்பில் குற்றச்சாட்டு இருந்த நிலையில், மாநில அரசு முட்டை வித்தகத்திலிருந்து வாங்கி, வளர்க்கப்பட்ட புழுக்கள், பட்டுப்புழு வளர்ப்பு மனைகளில் தொடர்ந்து இறந்துள்ளன.இதனால், பாதிப்படைந்த விவசாயிகள், நேற்று உடுமலை மத்திய பட்டு வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.தமிழக பட்டுக்கூடு உற்பத்தி விவசாயிகள் நலச்சங்க மாநில தலைவர் செல்வராஜ் கூறியதாவது:ஒரு வாரத்திற்கு முன், ஈரோடில் உள்ள மாநில அரசு வித்தகத்திலிருந்து வாங்கிய, 10,000 முட்டை தொகுதிகள் தரமற்றதாக இருந்துள்ளது. இதனால், ஒரு வாரத்தில் புழுக்கள் இறந்தன; அவற்றை தீயிட்டு எரித்து அழிக்கும் அவல நிலை உள்ளது.முட்டை, இளம்புழு வினியோக குளறுபடி குறித்து, மத்திய, மாநில பட்டு வளர்ச்சித் துறைக்கு பலமுறை மனு அளிக்கப்பட்டுள்ளது. தற்போது ஒவ்வொரு விவசாயிக்கும், 40,000 ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது.இதேபோல், நுாற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசு செயல்படுத்தி வந்த இன்சூரன்ஸ் திட்டமும், 9 மாதமாக புதுப்பிக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து, பட்டு வளர்ச்சித்துறை அதிகாரிகள் பேச்சு நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என உறுதியளித்தனர். இதையடுத்து, விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ